Friday, 20 December 2013

வா! வந்து பார் ! வர்ணித்தது போதும்.

கனியென வர்ணித்த கன்னங்கள் குழி விழுந்தன
முத்தென வர்ணித்த பற்கள் சொத்தை விழுந்து சிதறின

கட்டான உடல் கலை யிழந்து போயின
உதிரும் முடியும் நிறம் மாறும் முடியும்
பருவ மங்கையாய் இருந்த தோற்றத்தை மாற்றின
இன்னும் இருக்குமிடத்திலிருந்து வர்ணனை செய்கிறாய்

வா! வந்து பார்!
வரி வரிகளாய் வர்ணித்தது போதும்

நாட்கள் நகர்கின்றன
ஆண்டுகள் பறந்துவிட்டன

பறந்து போன இடம் அடைக்கலமானதோ
இருந்து வாழ்ந்த இடம் நினைவை விட்டு அகன்றதோ

பெண்ணின் பொறுமையால்
என்னின் நிலை அருமை அறியாமல் போனாய்

போனது போகட்டும்
இணைந்தவள் இருக்கிறாள்
இறக்கம் கொண்டு வந்து கண்டு விடு
இணைந்தவள் இறப்பதற்குள்

1 comment: