Saturday 22 February 2014

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.

(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)


தென்னகங்கண்ட அரபிக் கல்லூரிகளில் தலைசிறந்த ஒன்றாகத் திகழும் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை  இன்றைய சிறப்பிற்கு உயர்த்தி வைத்தவர்கள் அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.ஆவார்கள். இக்கல்லூரியின்  பொற்காலமான 1945 முதல் 1955 வரை  நிகரற்ற தலைவராய் விளங்கி இஸ்லாமிய கல்வித் துறையிலும், மார்க்கத்  துறையிலும் அப்பெருந்தொகை  ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நாம் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் அப்பெருமகனார் இக்கல்விக் கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பிற்காகவும்  பாடுபட்டார்கள் என்று  சொல்வது மிகையாகாது. எண்ணத்தாலும் எழில்மிகு சேவையாலும், பண்பாலும் பார்போற்றும் செய்கையாலும்    மிஸ்பாஹுல்,ஹுதா என்னும் கல்விச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்து நாடெங்கும்  ஞானஒளி பரப்பிய அப்பெருந்தலைவரின் வாழ்க்கை படித்துணரத்தக்கது. அவர்களது செயலும், செந்நெறியும்  எல்லோருக்கும்  வழி காட்டக் கூடியன. தலைவனுக்கேற்ற பெருந்தன்மையும் ஒரு சமூகத்தை நடத்திச் செல்லத் தக்க நிர்வாகத் திறமையும், தீயவைகளை துணிந்தெதிர்க்கும்  தறுகண்மையும் அல்லவை துடைத்து நல்லவை செய்யும்   நற்பண்பும், வரையாது வழங்கும் அக் வள்ளற்றன்மையும், ஒருங்கே பெற்றவர்களாதலால், இன்றைய தலைமுறையினருக்கு  அவர்களது வாழ்க்கை ஒரு முன்மாதிரியாகும். அவர்களது வாழ்க்கை வரலாற்றினைக் காண்போம். இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்.


இளமைப் பருவம்:


 (அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் தன் சகோதரர் ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹிமான் சாஹிப்)

 ஹாஜியார் அவர்கள் 1895 -ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள நீடூரில் ஈசுப் சாஹிபிற்கு இரண்டாவது குமாரராகப் பிறந்தார்கள். ஹாஜியார் அவர்களின் மூத்த சகோதரர் பெரிய முதலாளி  என்ற மரியாதையாக அனைத்த மக்களாலும் அழைக்கப்பட்ட ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹிமான் சாஹிப் ஆவார்கள். ஹாஜியார் அவர்கள் சின்னமுதலாளி என்று எல்லோராலும் அன்போடும் கண்ணியத்தோடும் அழைக்கப் பட்டார்கள்.  நீடூரில் பெண் குலத்திற்கு திருமறை கற்றுக் கொடுத்தவரும், ஒதுரம்மா என்ற அனைவராலும் மரியாதையோடு அழைக்கப்பட்ட ஜுலைகா அம்மா அவர்களது சகோதரியாவார். ஹாஜியார் அவர்கள் அக்காலவழக்கப்படி ஏற்றபருவம் எய்தியவுடன் திண்ணை பள்ளிக்கூடத்தில்  சேர்ந்து பள்ளி வாழ்க்கையை தொடங்கினார்கள். தாய்மொழியான தமிழ்க் கல்வியுடன் மார்க்கக் கல்வியையும் கற்றார்கள். பிறகு மாயூரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து 1910 -ம் ஆண்டு  7-ம் படிவத்தில் தேர்ச்சி பெற்றார்கள். பாலகனுக்கு இஸ்லாமியக் கல்வியில் உயர் படிப்பு கற்பிக்க எண்ணிய  தந்தை ஈசுப் சாஹிப் அவர்கள் மகன் அப்துல் காதரை  புகழ் பெற்ற வேலூர் பாக்கியாதுஸ்ஸாலி ஹாத் மத்ரஹா வில் சேர்ப்பித்தார்கள். அண்டை வீட்டு ம.அ. பக்கீர் முகம்மது அவர்களும் உடன் சேர்ந்தார்கள்.

     அங்கு இருவரும் சம்சுல் உளமாய 'செய்குள் ஹிந்த்',மொவ்லானா மொலவி  அப்துல் வஹாப் பானியே மதரசா அவர்களிடம் நேரிடையே கல்வி பயிலும் பேறு பெற்றனர். சிறாத்துல் இஸ்லாம்,சிறாத்துன் னஜாத், தவாரீஹ் ஹபீபே போன்ற பாடங்களை இயற்றிய பானி ஹஜ்ரத்  அவர்களிடமே மாணவர்களாக இருந்து அப்பாடங்களைப்  கற்றனர்.புத்தகங்களை இயற்றிய ஆசிரியர்களிடமே  அப்பாடங்களை கற்கும் பேறு சிலருக்கே கிடைக்கிறது.அப்பேற்றினை அடைந்தவர்களில் ஹாஜியார் அவர்களும் ஒருவராவார்கள் என  அறிந்து மகிழ்கிறோம்.ஹாஜியார்அங்கு மார்க்க சட்ட திட்டங்களையும் குர்ஆன், ஹதீது முதலியவைகளையும் ஐயந்திரிபுற  கற்றார்கள். அங்கு அவர்கள் பெற்ற இஸ்லாமிய ஞானம் பிற்காலத்தில் இஸ்லாமிய கல்விக்காகவும் ,தூய சாந்தி மார்க்கத்தில் நிற்பதற்கு வித்தாகவும் இருந்தது எனலாம்.  வெளிநாட்டுப் பயணம்

 நண்பர்களும் உறவினர்களும் கீழ்திசை நாடுகளுக்கு சென்று பொருளீட்டி வந்தனர்.  ஹாஜியார் அவர்ககள் தானும்  விருப்பங்கொண்டு  1912 -ம் ஆண்டில் பினாங்கு, சிங்கப்பூர், சைகோன்,ஹன்னோய்  முதலிய இடங்களுக்குச் சென்று வியாபார நுணுக்கங்களைக் கடு கற்று வாணிபத்தில்  தேர்ச்சி பெற்று  1914-ம் ஆண்டு தாய்நாடு திரும்பினார்கள். நீடூரில் உள்ள குடும்பத்திற்குச் சொந்தமான மளிகை வியாபாரத்தை ஏற்று எல்லோரும் போற்றும் வண்ணம் அதை நடத்தி வந்தார்கள்.

திருமணம்.

வாலிபப் பருவம் எய்தினார்கள். அவர்களின் சுறுசுறுப்பும் கொடுத்த காரியத்தை எடுத்து  முடிக்கும் செயல்திறனும் வாணிபத் துறையில் கண்ட வெற்றிகளும் அனைவரையும் வசீகரித்தன.எல்லாவற்றிற்கும் மேலாக கம்பீரத் தோற்றமும் கொண்டிருந்தாகள்.பலர் தங்கள் பெண்களை மணமுடிக்க முன்வந்தனர்.ஆனால் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவரும்  மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை  ஸ்தாபித்து ஒளியேற்றிவைத்து அங்கேயே ஆசிரியராகவும், இயக்கினராகவும் இருந்து அருஞ்செயல் புரிந்த மௌலானா மௌலவி ஹாஜி அப்துல் கரீம் கிப்லா அவர்களின் இளைய சகோதரியான உம்முசல்மா பீவியை  1917-ம் ஆண்டு மணமுடித்தார்கள்.அம்மாதரசியும் தன் வாழ்நாள் முழுவதும்,தன் பர்தாவின் ஒவ்வொரு செயலுக்கும் உறுதுணையாக நின்று அவர்களை ஊக்குவித்தார்கள். இத்தொடர்பின் மூலம் ஹாஜியார் அவர்கள் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவின் நிர்வாகத்தில் முழுபங்கு ஏற்று அதைத் தலைசிறந்த கலைத்தீபமாக அமர்த்தி வைக்க இறைவன் எண்ணினான் போலும். (உங்களின் மனைவியாகிய)அவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள். (பகறா 2:187) என்ற இறைவசனதிற்க்கொப்ப அவர்களது தூய  வாழ்கை அமைந்திருந்தது.

 வணிகம்
 தந்தை யூசுப் சாஹிப்  அவர்கள் தன் சகோதரர் கலந்தார் சாஹிப் அவர்களுடன் கூட்டுக் குடும்பம் நடத்தி வந்தார்கள்.குடும்பம் பெரிதாக விரிவடையவே, 1918-ம் ஆண்டு  நிடூரிலுள்ள வியாபாரத்தையும் , பழைய வீட்டையும் சகோதரர் கலந்தார் சாஹிப் அவர்களுக்கு கொடுத்து விட்டு வேறு புதிய வீடு ஒன்று தன் குடும்பத்திற்கு அமைத்துக் கொண்டார்கள். மாயூரத்தில் மளிகை கடை ஒன்றை நிறுவினார்கள். அதனை மகனார்  அப்துல் காதர் அவர்கள் பொறுப்பேற்று திறம்பட நடத்தி வந்தார்கள்.

 பொதுநலத் தொண்டு

அனுபவமும் ஆற்றலும் அவர்களுக்கு பெருகத்தலைப்பட்டன. அவற்றினூடே அன்பும், அறவழியும் இணைந்து வளர்ந்தன. சமூக  சேவை, சமுதாய சேவை ஆகியவற்றின் பக்கம் அவர்கள் நாட்டம் சென்றது. முதலில் பிறந்த ஊர்  பக்கம் கவனம் செலுத்தினார்கள். நீடூர்  ஒரு  சிற்றூராக பள்ளிவாசல் தெரு, மேலத்தெரு, கீழத் தெரு,  என்ற  மூன்று  தெருக்களுக்குள்  முடங்கிக் கிடந்தது. அஞ்சல் நிலையம் இல்லாமலும், ஊருக்கு அருகில் இரயில் பாதை இருந்தும் ஒரு  இரயில் நிலையம் இல்லாமலும் இருந்தது. 1918-ல் ஒரு கிளை அஞ்சல் நிலையம் நீடூரில் அமைப்பதற்கு அவர்கள் முன்னோடியாக இருந்தார்கள். தற்போது நீடூரில் இரயில் நிலையம் அமைந்திருக்கும் இடம் ஹாஜியார் அவர்களின் சொந்த இடமாகும். அந்த இடத்தை இனாமாக கொடுத்தது மட்டுமல்லாமல் அக்காலத்திலேயே ருபாய் ஆயிரத்திற்கு மேல் செலவு  செய்து இரயில் நிலையம் ஏற்படுவதற்கு மூல புருஷராக இருந்தார்கள்.நீடூரை  விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம்  அப்பொழுதே வேரூன்றலாயிற்று சமூகத்தில் அவர்கள் பெற்ற மதிப்பாலும்,ஆற்றலாலும் பல்வேறு கெளரவ பதவிகள் அவர்களை நாடி வந்தன. 1927 -ம் ஆண்டு முதல் 927 - 1935-வரை ஒன்பது ஆண்டுகள்  மாயூரத்தில் கௌரவ மாஜிஸ்ட்ரேட் பதவியை  வகித்து வந்தார்கள். ஆங்கில கல்வியை அவர்கள் அதிகம் கற்கவில்லையாயினும் கற்றவர்களைவிட தம்முடைய கட்டுப்பாட்டான வாழ்க்கை முறையாலும் தூதூய இஸ்லாமிய நன்னெறியில் மிகைத்து நின்றார்கள். இளமைப் பருவத்திலிருந்தே நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அந்த நாட்குறிப்பே அவர்களுடைய அவர்களுடைய ஒவ்வொரு சேவையும், நிகழ்ச்சிகளையும் விரிவாக அறிய உதவுகிறது.

 1932-ல் தமது சகோதரர் ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹ்மான் சாஹிப்அவர்களிடம் மளிகைக் கடையை ஒப்புவித்துவிட்டு,தனியாக பாத்திரக்கடை ஒன்றைத் துவங்கினார்கள். தமக்கு உதவியாக அந்த வியாபாரத்தில் கருப்பூர்  ஹாஜி இ.பக்கீர் முகம்மது அவர்களை அமர்த்திக் கொண்டார்கள். தனித்த தொழிலும் ஹாஜி இ.பக்கீர் முகம்மது அவர்களின் ஒத்துழைப்பும் ஹாஜியார் அவர்களுக்கு சமுதாயச் சேவையில் பெருமளவு தம்மை  ஆட்படுத்திக் கொள்ள வசதியாயிருந்தது.  ஹாஜியார் அவர்கள் காலைப்பொழுதில் மட்டும்தான் கடையில் பார்க்கலாம். மாலைபொழுதில் அவர்களைப் பார்க்க முடியாது. ஒவ்வொரு நாளின் பாதிப் பொழுதை சமுதாய சமூக சேவைக்கே ஒதுக்கியிருந்தார்கள். அவர்கள் எண்ணியிருந்தால் கோடி கோடியாகப் பணத்தை குவித்து பார்த்து ரசித்து இருக்கலாம். அதுவல்லவோ ஓர் இலட்சிய புருஷரின் இலக்கணம். இஸ்லாமிய பண்பில் ஊறியவர்கள், ஓர் உண்மை இஸ்லாமியனாகவே வாழ விரும்பினார்கள். நற்செயல்களில் ஒருவரை யொருவர் மிகைக்க மிகைக்க செய்யுங்கள் என்ற இறை வசனத்திற்கு ஒப்ப தலைப்பட்டார்கள்.
  நீடூருக்கு ஏழுகல் வடக்கே இருக்கிறது திருவாளப்புத்தூர் என்னும்  சிற்றுர். அங்கு முஸ்லிம், மக்கள் குடியிருப்பதற்கு மனைகளில்லாமல் அல்லற்பட்டு வந்தனர். இது நமது ஹாஜியார் கவனத்திற்கு வந்தது. வாளாவிருப்பார்களா! முழு முயற்சி செய்து ஜில்லா போர்டு மூலமாக   திருவாளப்புத்தூரில் 24  குடியிருப்புகள்  மனைகளுக்கு எற்பாடு செய்தார்கள். இவ்வாறு ஹாஜியார் அவர்களது சேவையின்  பலனை பிற ஊர் மக்களும் நுகரத் தலைப்பட்டனர்.

 ஹாஜியார் அவர்களது சகலரும், வட வியட்நாம்  ஹன்னேய் நகரில் பிரபல வியாபாரியாகத் திகழ்ந்தவருமான அல்ஹாஜ் பா. முகம்மது கனி அவர்கள்  நீடூரில் ஒரு பள்ளிவாசல் கட்ட விரும்பினார்கள்.  1934-ம் ஆண்டு ஹாஜியார் அவர்கள் தாம் முன்னின்று ரூபாய் பன்னிரண்டாயிரம்  செலவில் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவின் முன்னே அழகிய பள்ளிவாசலைத் தமது சகலருக்காகக் கட்டினார்கள்.

ஹஜ் யாத்திரை

  1937 -ம் வருடம் தாமும், தம் மனைவி, சகோதரி, ஆகியோரும் மற்றும் உறவினர்களும், நண்பர்களும் 20 பேர் இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாம் ஹஜ்ஜை நிறைவேற்றப் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அல்லாஹ்வின் நல்லருளால் அனைவரும் ஹஜ்ஜை முடித்துத் திரும்பினார்கள்.

அரசியல் வாழ்க்கை
(இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்) ஹாஜியார் அவர்களின் அரசியல் ஈடுபாடும் அதன் வாயிலாக ஆற்றிய பணியும் சிறப்பு வாய்ந்தன. .முஸ்லிம்களுக்கிடையே அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும், ஒற்றுமையை  உண்டாக்கவும் நாடெங்கும் முஸ்லிம் மாநாடுகள் நடைப்பெற்றன.  ஹாஜியார் அவர்கள் மாயூரம்  வட்டத்திற்கு தலைமையேற்றார்கள், அவர்களின் தலமையின் கீழ் அனைத்து  ஊர் மக்களும் அணி வகுத்தனர்.  1938-ம் ஆண்டு மாயூரம் தாலுக்கா மாநாட்டைக் கூட்டினார்கள். மிகுந்த கோலாகலத்துடன் பேறு வெற்றியுடன் நடந்தது அம்மாநாடு. பெருந்  தலைவர்கள் பலர் பங்கு பெற்றனர். இதுகாறும் இந்த பகுதியிலே அம்மாதிரியொரு மாநாடு நடைபெற்றதில்லை என்று  சொல்லுமளவுக்கு இருந்தது. மாநாட்டையொட்டி ரூபாய் ஆயிரத்திற்கு மேல் சொந்த பணத்தை செலவு செய்தார்கள்.

 பிறகு 1942-ம் ஆண்டு சென்னையில் மாநில முஸ்லிம்லீக் மாநாடு பெருமளவில் நடந்தது. பட்டி தொட்டிகளிலிருந்தும் மக்கள் மாநகரை நோக்கி திரண்டனர். அலைகடளென  ஆர்ந்தெழுந்த மக்களை ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் அழைத்து செல்லும் பொறுப்பு ஹாஜியார் அவர்கள் மீதே சார்ந்திருந்தது. அவர்கள் அயரவில்லை. பிறைகொடி பிடித்த அப்பெருங் கூட்டதிற்கு தனி இரயில் வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சரித்திரத்தையே  சமைத்தார்கள். ஒழுங்கோடும் உவகையோடும் அனைவரும் இரயில் ஏறி மாநாடு கண்டு வெற்றிகரமாக ஊர் திரும்பினர். தனி  இரயில் ஏற்படுத்தியதின் மூலமாக சொந்த பணம் வெகுவாக செலவழிந்ததையும் அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. சமுதாயப் பணியே அவர்களது இதய மூச்சாக இருந்தது.

நீடூர் வளர்ச்சி.

நீடூரில் இட நெருக்கடி மிகுந்து வந்தது. அதை விரிவு படுத்த வேண்டிய தருணமும் வந்தது. ஊரைச் சார்ந்துள்ள நஞ்சைப் பகுதிகள் ஏனாதிமங்களம் சோமசுந்தரம் பிள்ளை அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. ஹாஜியார் அவர்கள் தாமே பெருத்த முதலீடு போட்டு அவற்றை வாங்கி வீட்டு மனைகளாகவும் தெருக்களாகவும் பிரித்தார்கள். வீடு கட்டுவோருக்கு மனைகள் விற்று ஊரை விரிவடையச் செய்தார்கள்.

துளசேந்திரபுரம்  உருவாகுதல்.

கொள்ளிடத்தைச் சார்ந்த துளசேந்திரபுரம் சிறிய ஊர். அங்குள்ள முஸ்லிம்களுக்குக்  குடியிருப்பு  வசதிகளோ,
இறைவணக்கதிற்கு பள்ளிவாசலோ, சிறுவர் சிறுமியர்க்கு அறிவுக்கண் திறக்கச் செய்யும்  ஓர் அரபி மதரஸாவோ  இல்லாமலிருந்தன. அந்த ஊர் மக்கள் தங்களுக்கிருந்த அப்பெருங் குறைகளை  ஹாஜியார் அவர்களிடம் வந்து முறையிட்டனர். இவ்வளவு குறைகளையறிந்தும் ஹாஜியார் வாளாவிருப்பார்களா?
 
எவர்கள் விசுவாசம் கொண்டு கருமங்களை செய்கிறார்களோ, அவர்களை இறைவன் தன்னுடைய அருகில் புகுத்துவான். இதுவே தெளிவான வெற்றியாகும் ஜாஸியா(45:49)என்பது  குர்ஆனின் மணிமொழி.

நற்செயல்களே தம் நாடித்துடிப்பாக கொண்ட ஹாஜியார் அவர்கள் இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஊர் இருக்குமோ! என்று  கசிந்துருகி, மின்னல் வேகத்தில் செயல்பட்டார்கள். முதலில் ஓர் இடத்தை சொந்தத்தில் வாங்கி


எழில்மிகு பள்ளிவாசல் ஒன்றையும் மதரஸா ஒன்றையும் சிறந்த முறையில் கட்டிக்கொடுத்து. மக்களின் மனங்களிக்கச் செய்தார்கள். அவ்வூருக்கு   அருகில் ஆணைதாண்டவபுரம் எம். கிருஷ்ணசாமி என்பவருக்கு  சொந்தமாகவிருந்த 3  வேலி நிலத்தைத் தாமே  ரூபாய் எண்பதாயிரம்  பணம் போட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாகவும்,தெருக்களாகவும்  பிரித்தார்கள். வீடில்லா அவ்வூர்  மக்களுக்கு மனைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அவ்வூர் மக்களின் துயரத்தை துடைத்தார்கள்.  அல்லாஹ்வுக்கு உதவியென்பது  அல்லாஹ்வின் நல்லடியாருக்கு உதவியென்றாகின்றது. இம்மாதிரி கைமாறு  கருதாத உதவியினால் ஆண்டவன் தன் கூற்றிகேற்ப ஹாஜியார் அவர்களயும் வளர்த்து வந்தான்.


(இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்)

மாயூர நகருக்கு தனி அழகைக் கொடுத்துக் கொண்டு உயர்ந்து நிற்கும் மணிக்கூண்டு  ஹாஜியார் அவர்களின் அரச்செயலை,தொண்டுள்ளத்தை இன்னும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் நேசநாட்டு அணிகள், உலகையே கிடுகிடுக்க வாய்த்த எதிரிகளை, டுனிஷ்யாவில் புறமுதுகிடச் செய்த பெரு வெற்றியைக் கொண்டாட நினைத்த ஹாஜியார் அவர்களின் உள்ளத்தில் பாமர மக்களின் நலனும் பளிச்சிட்டது. அதன் விளைவுதான் 1943 -ல்  மாயூர நகரில் சுமார் எண்ணாயிரம் ரூபாய் சொந்தச் செலவில் அவர்கள் கட்டிய மணிக்கூண்டினாலடையும் பயனை எழுதிக் காட்டத் தேவையிலை.


 மாயூரம்  டவுன் பள்ளிவாசல்.


மாயூர நகரம் வாணிபத்திலும், பிற துறைகளிலும் நாளொரு மேனியும் விரிவடைதுக் கொண்டே வருவது கண்கூடு. இதில் முஸ்லீம்களின் பங்கு அனைத்துத் துறைகளிளேயும் கணிசமானது. வணிகத்திலாகட்டும், வழக்கு மன்றங்களிலாகட்டும், கற்கவரும் மானவர்களாகட்டும் கடைகளில் வந்து சாமான்கள் வாங்குபவர்களாகட்டும் தினமும் முஸ்லீம்கள் பெருமளவில் நகருக்கு வந்து போய்கொண்டிருக்கின்றனர். பகல் முழுதும் மாயூரத்திலேயே தங்கி வியாபாரம் செய்பவர்களும் நூற்றுக்கு மேல் பெருகியிருந்தனர். வல்லோனை வணங்குவதற்கு நகர மத்தியில் ஒரு  பள்ளிவாசல் இல்லாமலிருந்தது. செல்வம் மிகுந்தவர் பலர் இருந்தனர். தொழுவதற்கு ஒரு பள்ளியில்லையே என்று  சிந்தனை
செய்பவர்களுக்கும் குறைவில்லை. ஆனால் அதைச் செயலில் காட்டியவர் நம் ஹாஜியார் அவர்களே. தூர நோக்கும் தொண்டு உள்ளமும், வள்ளற்றன்மையும்  கொண்ட ஹாஜியார் அவர்கள் இதனை முழுதும் உணர்ந்தார்கள். 1945 - ல் அழகியதொரு இறைவன் இல்லத்தை சொந்தத்தில் எண்ணயிரம்  ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டி முடித்த அதே ஆண்டு வக்பு செய்தார்கள். மாயூர மத்திய பேருந்து நிலையத்திற்கருகில் நகர விரிவுப்பகுதியில் இன்று அமைந்திருக்கும் பள்ளிவாசலே அது. இந்த தெய்வீகச் செயலுக்குக் கூடச் சில பகுதியிலிருந்து எதிர்ப்பு கிளப்பியது. ஹாஜியார் அவர்கள் தைரியத்தினாலும் செல்வாக்காலும் இறையருளாலும் சமாளித்தார்கள். பள்ளிவாசலைச் சுற்றி தங்குவதற்குக் குடியிருப்பு அறைகளும் கடைகளும் கட்டி பள்ளிவாசலுக்கு நிலையான வருமானத்திற்கு வழி வகுத்தார்கள். இன்று அந்தப் பள்ளியில் நின்று இறைவனை நோக்கி கையேந்தும் அத்துணை உள்ளங்களின் இறைஞ்சுதலிலேயும், பள்ளியை நிர்மாணித்த அப்பெருமானுக்கு பங்குண்டு.


நீடூர்  அரபிக்கல்லூரிக்கான  சேவை.
 மதரஸா மிஸ்பாஹுல்  ஹுதாவின் தலைவராக அமைதியுடனும்    அழகுடனும் பணி சித்து வந்த அல்ஹாஜ் அ.யாகூப் சாஹிப் அவர்கள் 1945 -ம் ஆண்டு மே திங்கள் இறுதியில் இறைவனடி சேர்ந்தார்கள். அவர்கள் மதரஸாவின் நிர்வாக்கியல்ஹாஜ் மௌலானா மௌலவி அப்துல் கரீம் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மூத்த சகோதரரும்  ஹாஜியார்  அவர்களின் அன்பு மச்சானும்  ஆவார்கள். அல்ஹாஜ் யாகூப் சாஹிப்அவர்கள், தாம் நலக்குறைவுற்ற நிலையிலே  ஹாஜியார் அவர்களைக் கூப்பிட்டு,மதரஸாவின் பொறுப்பை ஒப்படைத்தார்கள். தமக்குப் பிறகு மதரஸாவைப் பேணிப் பாதுகாப்பதற்கு,  ஹாஜியார் அவர்கள் முற்றிலும் பொருத்தமானவர்,தகுதிப் பெற்றவர் என்று  உணர்ந்தார்கள். மேலும் அக்கல்விக் கூடத்தை  ஆல்போல் வளரச் செய்து பயன் சொரியச் செய்வார்கள் என்று உளமார நம்பினார்கள். அவர்களின் கணிப்பு எவ்வளவு உண்மையானது! நிதர்சனமானது! இதனிக் கேள்வியுற்ற அணைத்து மக்களும் மதரஸாவின் அங்கத்தினர்களும், அறிஞரும், ஆன்றோரும் வரவேற்றனர். ஏகமனதாக ஒரே குரலில் ஹாஜியார் அவர்களை  மிஸ்பாஹுல்  ஹுதாவின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.

  ஹாஜியார் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிலையிலேயே மதரஸாவின் சரித்திரம் திருப்பு முனை கண்டது. அதுவரை அடக்கத்துடன் அமைதியுடனும்  பணியாற்றிய மிஸ்பாஹுல் ஹுதா ஏற்றம் பல பெற்று நிமிரத் தொடங்கியது.  பணி செய்வதில் பெருகத் தலைப்பட்டது. கடல் கடந்தும் கல்வி மணம் பரப்பத் தொடங்கியது.

ஜில்லா போர்டு அங்கத்தினர்:
அதே ஆண்டு ஹாஜியார் அவர்கள் தஞ்சைஜில்லா போர்டு அங்கத்தினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சமூகத்தில் அவர்கள் பெற்றிருந்து நன் மதிப்பையும் கண்ணியமான தலைமைப் பொறுப்பையும் இதிலிருந்தே நன்குணரலாம். அதை கௌரவப் பதவியாகவும் அலங்கார உதியோகமாகவும் எண்ணி வாளாவிருந்து விடவில்லை. ஜில்லா போர்டு மூலமாக அரும் பெரும் பணிகளைச் சமுதாயத்திற்கும் மக்களுக்கும் செய்தார்கள்.

அரபிக் கல்லூரி வளம் பெறுதல்

மதரஸா மிஸ்பாஹுல்  ஹுதா, ஹாஜியார் அவர்களின் (இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்) அரவணைப்பில் சீரிய கவனம் பெறத்தலைப்பட்டது. அதனைப்  பெருக்கி வலுவும், விரிவும்  அடையச் செய்வதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார்கள். மதரஸாவின் நாஜிராக விளங்கி புகழ் பெற்ற அல்ஹாஜ் மௌலானா மௌலவி நா.ப. முஹம்மது இபுராஹீம் சாஹிப் அவர்கள், ஒவ்வொரு துறையிலும்  மதரஸாவின்  வளர்ச்சிக்கு ஹாஜியார் அவர்களுடனே தோள் கொடுத்து நின்றார்கள். மதரஸாவின் சேவையும்,வளர்ச்சியும் விண்முட்டுவதைக் காண்பதே தமது இலட்சியமாகக் கொண்டு உழைத்தார்கள்.  ஹாஜியார் அவர்கள் கல்விக் கூடத்தின் வளர்ச்சிக்காக யார் என்ன நல யோசனைகள் சொன்னாலும் கவனமுடன் கேட்பார்கள். பல பெரியோர்களின் யோசனைகளையும் நாடிச் செல்வார்கள். நீடூர்பிரபா வர்த்தகர் அல்ஹாஜ்  T.S. ராஜா முகம்மது அவர்களும் அவ்வொப்போது நல்கருத்துகள் சொல்லியும் கலந்துரையாடியும் ஊக்குவித்தார்கள்.   ஹாஜியார் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் சுப்ஹூ  தொழுகைக்குப்பின் நீண்ட நேரம் நண்பர்களுடன், மதரஸாவின் நேசர்களுடனும் அதனுடைய அபிவிருத்திக்காகவும் அழகிய வளர்ச்சிக்காகவும் கலந்தோலோசிப்பார்கள். பின்  மதரஸா மாணவர்கள் திருக் குர்ஆன் ஓதும் தேன்மழையில் நனைந்து உள்ளமும் உணர்ச்சியும் சிலிர்க்க மெய் மறந்திருப்பார்கள். அதன் பிறகே  தன் சொந்த அலுவல்களை கவனிக்கச் செல்வார்கள். திட்டமும் ,திண்ணிய எண்ணங்களும் செயல்படத் துவங்கின. பக்கத்து நாடான சிலோனில் வாழும் முஸ்லீம்கள் மார்க்கப் பட்றையும் இஸ்லாமியக் கல்வியின் இன்றியமையாதத் தன்மையையும் நன்குணர்ந்தவர்கள். அவைகளை செயல்படுத்த துணியும் செந்நேறியாளர்களை இருகரங்கள் நீட்டி வரவேற்க துடித்துக் கொண்டிருந்தார்கள்.மனிதகுல தந்தையான ஹஸ்ரத் ஆதம் (அலை)அவர்கள் தோன்றிய திருத்தலத்தை கொண்ட நாடல்லவா மார்க்கப் பற்று பீரிட்டெழுவதில் ஆச்சரியமில்லை. அவ்வுணர்வு அவர்களோடு ஊனோடும், உணர்வோடும் கலந்தது. நாடிப்பிடித்தறியும் சமுதாயத்தின் நல்வைத்தியரான ஹாஜியார் அவர்கள் நன்குணர்ந்தவர்கள். மதரஸாவின் வளர்ச்சியையே முழு மூச்சைக் கொண்ட தலைவர் அவர்கள் நாஜிர் அவர்களை சிலோனுக்கு அனுப்பினார்கள். செயலாற்றலும், சுவையான சொல்வளமும் கொண்ட  நாஜிர் நா.ப. அவர்கள் சிலோன் சென்றார்கள் அவர்கள் சுமந்து சென்ற நன்னோக்கையும் தலைவர் அவர்கள் வேண்டுகோளையும் கேட்ட அந்நாட்டுப்  பெருமக்கள்  உளமார வரவேற்று உபசரித்தார்கள். எடுத்த எடுப்பிலே புரவலர் சிலர் ரூபாய்  இருபத்து  ஏழாயிரதுக்கு மேல் தந்து மதரஸாவிற்கு நிலம் வாங்கி வைக்க முன் வந்தனர்.

   ஐவர் அடங்கிய  குழு  ஒன்றை  1945-ம் ஆண்டு  நீடூருக்கு அனுப்பி வைத்தார்கள். சிலோனிலிருந்து வந்த
செந்நெறியாளர்கள் தொகையை தலைவரான ஹாஜியார் அவர்களிடம் ஒப்புவித்து வேறு எந்த உதவி அவர்களால் செய்ய இயலும் என்று செப்பி நின்றனர். அப்பணத்தைக் கொண்டு கீழ்மராந்தூர்  என்னும் ஊரில்மதரஸாவிறகாக ஐந்து வெளி நிலம் வாங்கப்பட்டது.   ஹாஜியார் அவர்கள் அக்குழுவினருடன் கலந்து மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், கட்டிடத்தை விரிவுபடுத்த எண்ணினார்கள். அப்போது அறை ஒன்றிற்கு  ஐந்நூறு  ரூபாய் அளிப்பது என்ற திட்டம் உருவானது. சிலோனிலிருந்து வந்த சீலர்கள் உடனே அத்திட்டத்திற்கு ஆதரவு தந்தனர்.ஹாஜியார் அவர்கள் தமக்காகவும் தம் குடும்பத்தினருக்காகவும், ஐந்து அறைகளுக்கு பதிவு செய்துக் கொண்டார்கள். இத்திட்டத்தின் மூலம் 17 அறைகள் அறைகள் கொண்டிருந்த மதரஸா  1948-ல்  ஐம்பது அறைகளாக வளர்ச்சி பெற்று மாணவர்கள் எண்ணிக்கையும் நூறாக உயர்ந்தது. நவீன வசதிகளும் கட்டிடத்தில் அமைக்கப்பட்டன. 

1948-ம் ஆண்டு மதரஸாவின் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஹாஜியார் அவர்கள்  ஏற்படுத்தினார்கள். நடுத்தர பள்ளியாக ஆலிம் ஸனது  மட்டும் வழங்கிக்கொண்டிருந்த  மதரஸா கல்லூரியாக உயர்த்தப்பட்டது.  அதே ஆண்டு முதல் பட்டமளிப்பு விழாவை மிகப் பெரிய அளவிலும் சிறந்த முறையிலும் செய்து வைத்தார்கள். அத்தகைய ஒரு விழாவிற்கு நாடெங்கினுமிருந்து நல்லடியார்கள் திரண்டு வந்தார்கள்

மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே மேலும் பல வசதிகள் எற்படுத்தவும், திறமைமிக்க ஆசிரியர் குழு ஒன்று அமைக்கவும்,மதரஸாவிற்கு நிரந்தரமான  வருவாய் தேவைப்பட்டது. போதுமான சொதில்லாமல் செம்மையாக  நடத்த முடியாது என்பதை உணர்ந்தார்கள். மீண்டும் நாஜிர் மௌலவி நா.ப. முஹம்மது இபுராஹீம் அவர்களையும், சிறந்த பேச்சாளரான மௌலாபுலாலோ ஹஜ்ரத் அவர்களையும் கீழ்திசை நாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள்  இருவரும்  1951-ம் ஆண்டு மலேசிய, சிங்கப்பூர், தெற்கு வியட்நாம், வடக்கு  வியட்நாம், முதலியநாடுகளில் விரிவாகப் பயணம் செய்தார்கள். சென்ற இடங்களிலெல்லாம் இந்தியர் பலர் வணிக மன்னர்களாகத் திகழ்ந்ததை கண்டு களிப்புற்றனர். பொருளீட்ட  பல ஆயிரங்கள் கடந்து சென்றாலும் பொன்னூர்ந்த மார்க்கப்பற்று அவர்கள்  உள்ளங்களில் இன்னும் பொங்கி வழிந்துக் கொண்டேயிருக்கிறது. அறச் செயல்களுக்கும் அறங்காக்கும் கல்விக் கூடங்களுக்கும் அவர்கள் தரும் ஆதரவும்,அரவணைப்பும் புகழ்மிக்கது. ஹாஜியார் அவர்கள் கீழ்திசை நாடுகளிலுள்ள அணைத்து முஸ்லீம் வியாபாரிக்களிடையேயும் நாக்கு அறிமுகமானவர்கள். தம்முடைய சீரிய செயல்களால் செம்மலேன போற்றப்பட்டார்கள். ஹாஜியார் அரபிக்கல்லூரிக்கு  தலைமையேற்றுள்ளார்கள் என்று  அறிந்ந்ததுமே புளகாங்கிதமடைந்திருக்கிரார்கள். ஹாஜியார் அவர்கள் கீழ்திசை நாடுகளிலுள்ள அணைத்து நண்பர்களுக்கும் அபிமானிகளுக்கும் ,பிரமுகர்களுக்கும் இரண்டு உளமா பெருமக்கள் வரும் நோக்கத்தி நேரிடையே எழுதினார்கள். தென்னகத்திலேயே சிறந்த கலைதீபத்தை உருவாக்க நினைக்கும் தமது சீரிய எண்ணத்தை வெளியிட்டார்கள். இஸ்லாமிய கலாசாரத்திற்கும்  அதை உலகெங்கும் பரப்பும் தூதர்களான உலமாக்களை உருவாக்கும் சிறப்புமிகு பணிக்கும், வாரி வசங்க முன் வந்தனர். சென்ற இடங்கள் தோறும் இரண்டு மௌலவிகளுக்கும்இரத்தினக் கம்பளம் விரிதாற்போன்று வரவேற்பு  நல்கப்பட்டது. கை நிறைய மனங்குளிர அள்ளித்தந்தார்கள். ரூபாய்  ஒரு லட்சத்திற்கு மேல் திரட்டிக் கொண்டு ஊர் திரும்பினார்கள். அந்த தொகையைக் கொண்டு மதரஸாவிற்கும்  பதினாறு வேலி நஞ்சை நிலம் வாங்கி வைத்தார்கள்.  கல்லூரி கட்டிடத்தை மேலும் புதுப்பித்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வசதி செய்து தந்தார்கள். மதரஸா பணத்திலேயே அதற்கு  முன்னால் ஏட்டாவது வகுப்பு வரையிலான நடுத்தரப் பள்ளியையும் பெண்களுக்கு ஆரம்பப் பள்ளியோன்றையும் கட்டித்தந்தார்கள். தற்போது மதரஸாவின் முன்னால் கட்டப்பட்ட நடுதரப்பள்ளி இடிக்கப்பட்டு    ஜாமியா  மிஸ்பாஹுல்  ஹுதா பள்ளிவாசல் விரிவாக்கம் செயப்படுள்ளது.

 அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.
மக்கட் பேறு :
 தமது குடும்பம் விரியடையவே தம்மால் விரிவாக்கப்பட்ட நீடூர்  ஜின்னா தெருவில் வீடு ஒன்றைக் கட்டி ஹாஜிமஹால் என அதற்குப் பெயர் சூட்டி அதில் வாழ்ந்து வரலானார்கள். வளமார் விரிந்த நெஞ்சோடு,  விஞ்சு  புகழ் வள்ளற்றன்மையோடு நிறைந்த மக்கட் செல்வத்தையும் பெற்றிருந்தார்கள்.

 ஷபீர் அஹ்மத், 
அப்துல் ஹமீத், முகம்மது ஜக்கரியா,

 அப்துல் லத்தீப், 

அப்துல் ஹக்கீம், 

முகம்மது சயீத், 

முகம்மது அலி ஜின்னா  
என்ற ஆண் மக்களும்.
ரஹ்மததுன்னிசா, பாதிமாஜின்னா என்ற பெண் மக்களும் பிறந்தனர்.

  நியாயம் வழங்குதல் :
ஹாஜியார் அவர்கள் தஞ்சை மாவட்டம் முழுதும், அதைத் தாண்டியும் அறிமுகம் ஆனவர்கள். சொல்லாலும் வாக்காலும், இறைவழி நின்று செயலால் அதைக் கட்டிக்காத்த அந்த பெருமகனின் சேவை மக்களிடையே ஏற்பட்ட எண்ணிறந்த பிணக்குகளை மனமுறிவுகளை நேர்படுத்தியிருக்கின்றன. எத்தனையோ சச்சரவுகள், சண்டைகள்,
வழக்கு மன்றம் செல்லாமலே ஹாஜியார் அவர்களின் பஞ்சாயத்தால் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கின்றன.

இறையடி சேர்தல்:
அவர்கள் இவ்வுலகில் இறுதி மூச்சு சுவாசிக்கும் வரை மக்கள் நலனும், பொது நலத் தொண்டுமே அவர்களிடத்து முதலிடம் பெற்றன. அவர்கள் பெற்ற செல்வங்களைக் காட்டிலும்,பேணி வளர்த்த   மதரஸா மிஸ்பாஹுல்  ஹுதாவையே பெரிதும் நேசித்தார்கள். உலகமுள்ளளவும் அது ஞான ஒளி பரப்பி சமுதாயத்தின் அகக் கண்ணைக் திறந்து ஹாஜியாரின் உன்னத சேவைக்கு சாட்சியம் கூறிக்கொண்டிருக்கும். 1955 -ம் ஆண்டு அவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது, அதே ஆண்டு மே திங்கள் ஐந்தாம் நாள் பகல் சுமார் 2 மணிக்கு ஆண்டவன் கட்டளைப்படி இவ்வுலகை நீத்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்,மெய்யாகவே நாம் இறைவனை சேர்ந்தோர் ஆவோம் மேலும் மெய்யாகவே நாம் திரும்பிச் செல்கின்றோம்.  (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) ஆவி பிரியும் சில வினாடிகளுக்கு முன்கூட தமக்கு வைத்தியம் செய்த மருத்துவருக்கு நன்றி கூறினார்கள். கண்ணீர் பெருக்கெடுத்தோட  தேம்பி கொண்டு ஒரு கூட்டமே சுற்றிலும் நின்று கொண்டிருந்தது. கடைசி நிமிடத்தில் அனைவரையும் அவர்கள் அழைத்து தாம் அறியாமல் ஏதாவது பிழை செய்திருந்தால் பொறுத்தருளும்படி கேட்டுக் கொண்டார்கள். இறுதி நிமிடம் வரை இறைவனுக்கேற்ற அடியானாகவும் குற்றமற்றவனாகவும் இருக்க நாடியதையே இந்த நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. புதல்வர்கள்,புதல்விகள்,உற்றார்,உறவினர், அவர்கள் வளர்ப்பால் வளர்ந்தோங்கி இருக்கும் மதரஸாவும்,மாணவர்களும்,கட்டி முடித்த கல்விக் கூடங்களும் சோகமே உருவாக நின்று அறற்ற இறுதி விடை பெற்றார்கள்.

 ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைக்க வேண்டியதாகும்.(இறுதியில்) நீங்கள் நம்மிடமே திரும்பி வாருங்கள்.
என்ற இறைவசனத்தை  எண்ணி சாந்தி பெறுவோமாக.

Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்
----------------------------------------------------------------------


K.M. ஜக்கரியா, B.Com.,
( K.M. ஜக்கரியா, B.Com., அவர்களது  சொந்த ஊர் எலந்தங்குடி)

அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப் அவர்களது சரிதத்தை எழுதிய K.M. ஜக்கரியா, B.Com., அவர்கள் மிகவும் புகழ்பெற்ற சிறந்த எழுத்தாளர். பல்வேறு இஸ்லாமிய  இதழ்களில் இவரது படைப்புக்கள்  வெளிவந்துள்ளன. பல்வேறு இஸ்லாமிய  இதழ்களில் இவரது படைப்புக்கள்  வெளிவந்துள்ளன .இஸ்லாமிய இலக்கியக் கழகத்தில்  பல்லாண்டுகளாக பொருளாளராக இருந்து சிறப்பான சேவை செய்து வருபவர் . K.M. ஜக்கரியா அவர்கள் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் படித்தவர்.  படித்த பின்பு மாயூரத்தில் சில காலம் தொழில் செய்த பின்பு  லாவோஸ் சென்று அங்கு அமெரிக்கன் வெளிவுரைத் துறையில் லாவோஸ்-ஒப்பந்த வல்லுநர் வேலையில் பணி செய்தார். பின்பு ஈரானில் அமெரிக்கன்  எண்ணெய் நிறுவனத்தில் ஜெர்மன் எஃகு ஆலை, பின்பு குவைத் மின் நிலைத்தில் பணியாற்றினார் .பலநாடுகளுக்கு சென்று வந்த அன்பவமுண்டு . அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அமெரிக்க அரசால் சிறப்பிக்கப்பட்டவர்
-----------------------------------------------------------------------
     நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal
    ஊருக்குப் பெருமை « SEASONSNIDUR



3 comments:

  1. அருமை ............அண்ணே

    ReplyDelete
  2. Wonderful Post & Very Informative

    ReplyDelete
  3. அருமையான அவசியமான பதிவு. ஹாஜியாரை அல்லாஹ் மறுமையில் மேலும் மேலும் கண்ணியப்படுத்துவானாக, ஆமீன்.

    ReplyDelete