Friday, 17 May 2013

உன்னுடன் வருவது யார் ?

பிறப்பு உறுதி இல்லை. இறப்பு உறுதி. இறப்பு இறுதியாவதுமில்லை

இறப்புதான் பிறப்பின் தொடக்கம். வாழ்ந்த வாழ்வின் பதிவேட்டுகளின்  பிரதிபலிப்பு இடமாற்றமான புதிய இடத்தின் பிறப்பில் உரிய பலனைத் தரும்.

மரணம் என்று ஒன்று உண்டு என நாம் அறிந்தும் அதனை மறந்து செயல்படுகின்றோம்.

மரணம் வரும்போது மரணத்தின் பயம் வருகின்றது .அது இந்த அனுபவித்த வாழ்வு நம்மை விட்டு அகலுகின்றதே என்பதனால். மரணம் ஒரு முடிவாகி விடாமல் அது  புதிய இடத்தில்  பிறந்து பயணம் தொடர்கின்றது என்ற நம்பிக்கை வருவதில்லை.அந்த நம்பிக்கை வரும்போது கிடைத்த இந்த வாழ்வை பிறக்கப் போகும் இடத்திற்கு தகுந்தது போல் இந்த வாழ்வை முறைப் படுத்திக் கொள்வோம். இதுவே இறுதியென்று நினைக்க மாட்டோம் .

   இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான் இறுதி என்று நாம் எண்ணுகின்றோம். இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால் மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும் இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .

மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு. 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35

 உன்னுடன் வருவது யார் ?


மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள். 

    1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்


அன்றே பட்டினத்தாரின் கவிதை மனித வாழ்வினை அறிய வைத்தது .

“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு

கைத்தலை மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு காடுமட்டே,

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.”

 இப்பொழுது கவிஞர் கண்ணதாசன் பாடல்

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?

கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?வீடுவரை உறவு

வீதி வரை மனைவி

காடு வரை பிள்ளை

கடைசி வரை யாரோ?

1 comment:

  1. /// இலை விழுந்தால் எரு... ///

    அருமையாக சொன்னீர்கள்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete