Wednesday, 22 May 2013

முயல்வது நம் கையில். முடிவு இறைவன் நாடியது

 (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் - .குர்ஆன்-1:5


முயல்வது நம் கையில். முடிவு இறைவன் நாடியது . நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் இறைவனின் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம். ஆண்டவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இறைவன் வசம் உள்ளது . முயற்சி செய். முடிவை ஆண்டவன் வசம் விட்டு விடு. நாம் தேவை இல்லாமல் படைக்கப் படவில்லை. நாம் நம் கடமையினை   செய்தே ஆக வேண்டும் .செய்யத் தவறினால் 'உனக்கு இத்தனை ஆற்றல் கொடுத்தேனே ஏன் அதனை பயன் படுத்தாமல் விட்டு விட்டாய்' என்ற கேள்விக்கு நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

 நம் தாய் மர்யம்(ஸ.ல்) அவர்கள் ஈஸா நபியினை  ஈன்றடுத்தபோது பசி வந்து இறைவன் அருள் நாட நீ அந்த பேரித்தம் மரத்தினை குலுக்கு பழம் கொட்டும் அதனை எடுத்து உன் பசியினை ஆற்றிக்கொள் என இறைவன் சொன்னான். இறைவன் நினைத்தால் பசி இல்லாமலோ அல்லது பழம் தந்தோ பசியைபோக்க உதவியிருக்கலாம்.

 "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

-குர்ஆன் -19 : 25


 இறைவன் ' என்னிடம் நாடு அதே சமயம் உனது முயற்சியையும் மேற்கொள்' என்று நினைவுபடுத்துகின்றான். இதுதான் நாம் கடைபிடிக்க வேண்டியது.

 செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.


  நாம் அகற்ற வேண்டிய தாழ்வு மனப்பான்மை. ஒரு மனிதனின் தோல்விக்கு முதல் காரணமாக அமைவது அவனுடைய தாழ்வு மனப்பான்மையாகும் ஒருவனுக்கு எல்லா திறமைகளும் இருக்கும். ஆனால் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை தோல்விக்குச் சொந்தக்காரனாக்கி விடுகிறது. தன்னைப் பிறரோடு ஒப்பீடு செய்து பார்ப்பதும் தாழ்வு மனப்பான்மைக்கு ஒரு காரணமாகிவிடுகிறது.

 நாம் எல்லோரும் அசாத்திய சக்தி படைத்த மனிதர்கள் என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். நம்மைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்களுக்கும் உள்ள திறமை நமக்கும் உள்ளது என்பதை முதலில் நாம் உணர வேண்டும். சிலர் முதல் தோல்வியிலேயே துவண்டு போய்விடுவார்கள். சிலர் எத்தனை முறை தோற்றாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வெற்றிக்காக முயற்சி செய்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒருநாள் வெற்றியும் பெறுவார்கள்.

1 comment:

  1. /// செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன... ///

    தன்னம்பிக்கை வரிகள் பல... வாழ்த்துக்கள்...

    ReplyDelete