Wednesday 25 September 2013

மனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது!


 அம்மாவுக்கு என் மீது அளவு கடந்த பாசம். நான் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான் எனக்கு ஆனந்தன் என்ற பெயர் எனக்கு வைத்திருப்பாளோ!

  நான் குழந்தையாக இருக்கும்போதே எனது அப்பா இறந்து விட்டதால் அப்பா வைத்திருந்த பொட்டிக் கடையை தானே தொடர்ந்து நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து என்னை படிக்க வைத்தாள். பாவம் அம்மாவுக்கு ஒரு கண்தான்,  மற்றொரு கண் இருக்குமிடம் பள்ளமாக  இருக்கும்.  ஒரு கண் பார்வையோடு வீட்டு வேலையையும் பார்த்துக் கொண்டு கடையையும் கவணித்துக் கொள்வாள் . 

 சிறிய வருமானத்தைக் கொண்டு அரசாங்க உதவிப் பணமும் பெற்று பொறியாளர் படிப்பு வரை என்னை மிகவும் சிரமப்பட்டு படிக்க வைத்தாள். என் சிறுவயதில் அம்மாவின் அழகான முகத்தில் எனக்கு குறை தெரியவில்லை. ஒற்றைக் கண்ணுடன் இருப்பதால் அம்மாவின் முகம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்ற  மனம் எனக்கு வந்தது உடன் படிக்கும் மாணவர்கள்  ' உங்க அம்மாவுக்கு ஒரு கண் பார்வைதானே! ' என்று கேட்டதிலிருந்து.  கல்லூரிக்கு அம்மாவை என்னை பார்க்க வரவேண்டாம் என்று சொல்லி விட்டதிலிருந்து அவள் என்னைப் பார்க்க கல்லூரிக்கு வருவதில்லை.

  படிப்பு முடிந்து நல்ல வேலை சென்னையில் கிடைத்தது . சென்னையில் பொறியாளர் வேலையில் கிடைத்த வருமானத்தில் சிறிது தொகையை அம்மாவுக்கு சிறிது காலம் அனுப்பி வந்தேன். காலம் கடக்க ஊருக்கு சென்று வருவதையும் நிறுத்தி விட்டேன்.

 காதலித்த பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு ஒரு பெண் குழந்தையுடன் சென்னையிலேயே அம்மா இல்லாமல் குடும்பம் நடத்தி மகிழ்வாக இருந்தேன். ஒரு நாள் எதிர் பாராமல் என்னைப் பார்க்க அம்மா வந்து விட்டாள். அவள் வந்த போது மனைவியும், குழந்தையும் இருந்ததால் அவளை அறியாததுபோல் அவள் முகவரி மாறி வந்திருப்பதாக சொல்லி அனுப்பி விட்டேன். அம்மாவும் என் குணமறிந்து, என் நிலைமையைக் கருதி  நான் நன்றாக இருக்க வேண்டுமென்ற நல்ல மனதோடு அமைதியாக ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாள். அம்மாவை என் மனைவியும், குழந்தையும் பார்த்திராததால் பிரச்சனை ஒன்றும் வரவில்லை.

அலுவலகம் வேலைக் காரணமாக அம்மா இருக்கும் என் சொந்த ஊருக்கு அவசியம் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் எங்கள் ஊருக்கு நான் மட்டும் சென்றேன்.
அங்கே என்னை பார்த்த ஒரு பெரியவர்.
 'தம்பி நன்றாக இருக்கிறாயா; என்று அன்பாக விசாரித்தார்.
அம்மாவுக்கு பணம் அனுப்புகிறாயா?' என்றதுடன் பாவம் உன் அம்மா உடல் நிலை சரி இல்லாமையால் கடையையும் விற்று விட்டு நீ அனுப்பும் பணத்தில் வாழ்கிறாள்' என்றார் அந்த பெரியவர்.

  மனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது. அவசர அவசரமாக அம்மா இருக்கும் வீட்டை நோக்கி ஓடினேன். வீட்டில் சுருண்ட நிலையில் கடுமையாக பாதிக்கப் பட்ட நிலையில் திணறிய மூச்சோடு தன்னிலை மறந்து தனது கையில் ஒரு தாளை வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். அந்த கடிதத்தை அவள் கையிலிருந்து எடுத்துப் படித்தேன். அதில் நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு விபத்தில் அடிப்பட ஒரு கண் பார்வை போனதால் தன் மகன் ஒரு கண் பார்வையோடு இருப்பதை விரும்பாமல் தனது கண்ணை எனக்காக கொடுத்து இரு கண் பார்வையோடு நான் இருக்க தன் கண்ணை தியாகம் செய்துள்ளதனை அறிய வந்தேன் . என் இருகண்களிலிருந்தும் அருவியாக நீர் கொட்டியது.அம்மாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்படும்போதே அம்மாவின் உயிர் அவளை விட்டு பிரிந்துப் போனது .

அத்தனை சிரமத்தையும் அடக்கிக் கொண்டு என்னைப் பற்றி ஒரு குறையும் சொல்லாமல் என்னைப் பற்றி உயர்வாகவே சொல்லி பெருமைப் பட்டுக் கொண்டிருந்தாளாம். அதனால் ஊர் மக்கள் ஒரு குறையும் என்னைப் பற்றி சொல்லவில்லை. ஊர் மக்களுக்கு எனக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரியாது. இறந்தும் என் பெயர் கெடாமல் இருக்கச் செய்து விட்டாள். வாயடைத்துப் போய் செய்ய வேண்டிய கடமையை முடித்து பாரமான மனதுடன் சென்னைக்கு திரும்பினேன்.


மனிதர்களுக்கு இரக்கம் காட்டாதவனுக்கு அல்லாஹ் இரக்கம் காட்ட மாட்டான். (நபிமொழி)
 “தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள. தாய் மீது நேசம் காட்டு,மாறாத அன்பு செலுத்து அதுதான் நம் வாழ்வின் அடித்தளம். அம்மா இல்லாமல் நாம் ஏது? அந்த அம்மா இருக்கும் போதே அந்த தாய்க்கு பணிவிடைச் செய்து நன்மையைப் பெற்றிடுவோம். தாய் போனபின் அழுவதனால் ஒரு பயனுமில்லை.

1 comment: