Sunday, 31 March 2013

இல்லறம் என்றும் மகிழ்வுதான்

 பெண்கள் அதிகமாக பேச விரும்புவார்கள்.அதிலும் கலகலவென்று பேசும் ஆண்களைத்தான் பிடிக்கும். நமது சோகத்தினைக் கொட்டக் கூடிய இடமாக மனைவியை மாற்றக்கூடாது .
பெண்கள் அதிகம் சாப்பிட மாட்டார்கள் அவர்கள் சமைக்கும் போதே உப்பு, புளி,காரம் பார்பதற்கு ருசி பார்க்க சிறிது வாயில் விட்டு பார்பதிலேயே அவர்கள் பசி போய்விடும். ஆண்கள் வீட்டில் இல்லையன்றால் அவர்கள் சமைப்பதனைக் குறைத்துக் கொள்வார்கள் . அவர்கள் விரும்புவதெல்லாம் நாம் நன்றாக சாப்பிட வேண்டுமென்பதே. அதனால் அவர்களை பாராட்டிக்கொண்டே இருங்கள்.
அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் (மறைக்க வேண்டியதை மறைத்து சொல்ல வேண்டியதை சொல்லி) இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் மகிழ்வுதான்.
உங்கள் மனைவியின்   விருப்பு, வெறுப்புகளை அறிந்து, அதன்படி விட்டுக் கொடுத்து நடந்து அவர்களது விருப்பங்களை அலட்சியப்படுத்தாமல் இறுக்க பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிடிக்காததாக இருந்தாலும், அவருக்கு பிடித்ததை நீங்க ரசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் .

அறிவுரை சொல்வது சிலருக்கு வியாதி

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட் (எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

 அறிவுரை எப்படி இருக்க வேண்டும் ! உலகில் இனாமாக யாராலும் கொடுக்கக் கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா! அல்லது பாதிப்பினை உண்டாக்குமா. இது கேட்காமலும்   கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாக மாறும்சொல்லும்  நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .

மற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும்  நாம் அதன்படி நடப்பதில்லை.

 அறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது   கேட்பவர் இப்படியும் நினைக்கலாம் .
இவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான் .
அறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.

Saturday, 30 March 2013

ஆண்கள் மோசமானவர்கள் அல்ல!

உன்னை நேசிக்கிறேன்
உன்னையே நேசிக்கிறேன்
உனக்காக எதையும் செய்வேன்
உனக்காக காத்திருக்கிறேன்
உன் நிறம் எனக்கு முக்கியமல்ல
உன் அன்பையே வேண்டி நிற்கிறேன்
உன் விருப்பம் அனைத்தையும் நிறைவு செய்வேன்
உன் மகிழ்வே என் மகிழ்வு
உன் மடியில் உயிர் விடுவேன்
உன்னோடு கொண்ட காதல் உண்மையானது
உன்னையே மண முடிப்பேன்
இத்தனையும் காதல் வளர மண முடிக்க சொன்ன வார்த்தைகள்
இந்த வார்த்தைகள் அனைத்தையும் நம்பித்தானே திருமணம் முடிந்தது

சொன்னதெல்லாம் உண்மை
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
உண்மையாக பொய் கலக்கவில்லை
திருமணத்திற்குப் பின் தனி குடுத்தினம் வருவேன் என்று சொல்லவில்லை
திருமணதிற்கு பின் எனது தாயை விட்டு பிரிந்து வருவேன் என்றும் சொல்லவில்லை
திருமணதிற்கு பின் உன் தாயோடுதான் இருப்பேன் என்றும் நீ சொல்லவில்லை
திருமணதிற்கு பின் நான் ஈட்டிய பொருளை உங்கள் வீட்டில் கொண்டு சேர்ப்பேன் என்றும் நீ சொல்லவில்லை

Friday, 29 March 2013

தவறாக இருந்தால் கொட்டு போடுங்கள்

 தாங்கள் கொடுக்கும் சிறப்பான செய்திகள்,அறிவார்ந்தவைகள்  பரவலாக்கப்பட வேண்டும் .அதனை மற்றவர்களும் எடுத்துப்  போட வேண்டும் .கிடைத்த இடம் தெரிவிக்கப் பட வேண்டும்.ஆனால் உரியவருக்கு அதன் பெருமை, நன்மை சேர வேண்டும் அதன் வழியே நமக்கும் நன்மை கிடைக்க  வேண்டும். நல்ல பொருட்களைத்தான் மக்கள் நாடுவார்கள் . நீங்கள் நல்லவரா! அல்லது கெட்டவரா! எடுத்தவர்  நல்லவரா? அல்லது கெட்டவரா? என்பதை  இறைவன் எடை போடட்டும்.  காப்புரிமை சொல்லி மக்கள் பயன்படுவதை தடுக்க வேண்டாம்.இருந்த வரை நன்மையான காரியத்தை செய்தோம் என்ற மன நிம்மதி கிடைக்கும் .இறைவன் நமக்கு கொடுத்த அறிவு நம்மோடு அழிந்துவிடக் கூடாது . தொடருங்கள் உங்கள் சேவையை அதன் வழியே நன்மையையும் மகிழ்வையும் அடைந்து விடுங்கள்

 
எங்கள் பக்கமும் வந்து பார்வையிட்டு தவறாக இருந்தால் கொட்டு போடுங்கள் நன்றாக இருந்தால் சொட்டு போட்டு உற்சாகம் கொடுங்கள். தாங்கள் எங்கள்  பக்கமும் வந்தால் எங்களுக்கு பெருமையோடு மகிழ்வும் கிடைக்கும் அத்துடன் உங்கள் வளமான நடையை கண்டு பிரமிப்பவர்களும் அதிகமாகலாம்

Thursday, 28 March 2013

விரும்புவது கிடைக்க வழியைத் தேடு

உன் மனைவி மீது பாசம் கொள் .உனது மகளின் கணவர் உன் மகள் மீது எவ்விதம் பாசம் கொள்ள விரும்புவதைப் போல்
உன் கணவனை நேசி. உனது மகனின் மனைவி உன் மகன் மீது எவ்விதம் நேசம் கொள்ள வேண்டும் என்று நீ விரும்புவதைப் போல்

குறிப்பு : மருமகள் மகனை மடக்கி தன்னை மறக்கச் செய்கிறாள் என்பதைப் போல் அல்ல
மற்ற குழந்தைகளை நேசி உன் குழந்தைகளை நேசிப்பது போல்
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
நீ பொருள் சேர்க்க விரும்புவதுபோல் மற்றவர்களும் சேர்த்து சேமிக்க வேண்டுமென விரும்பு
மற்றவர்கள் நலமாக இருந்தால்தான் நாமும் உயர்வாக இருக்க முடியும்

கடமையச் செய்து கேட்பது உயர்வு

அளவற்ற அருளாலனாய்
நிகரற்ற  அன்புடையோனாய்
நிலையாய் நிலைத்துருப்பவனாய்
நிறைந்த மனதுடையவனாய்
நினை நினைத்தோர்  மனதில் நிறைந்தவனாய்
நினை யல்லால் யாரை வைத்து தொடங்குவோம்
நினை விடுத்து யாரிடம் யாம் யாசகம் கேட்போம்

உமை முழுமையாக அறிந்து விட்டால் தொல்லை ஏது! துயரமேது!
உமை நாடியோருக்கு நன்மையே செய்வாய்
உம்மிடம் வேண்டியவர்க்கு  செய்தவையும்  நன்மையாக இருக்கும்
உம்மை நாடி  வேண்டியவர்க்கு செய்யப்படாமல் விட்டமையும் நன்மையாகவே  இருக்கும்

உமை நாடி கேட்பதும் உமை நினைத்து தொழுவதும் யம்மிடமிருக்க
உமையல்லால் யாரை தொழுவோம்
உமையல்லால் யாரிடம் கேட்போம்
உமக்கு இணையாக யாரையும்  சிந்திக்க மனம் வருமோ!

உம்மிடம் கேட்பது யம் கடமை
கடமையச் செய்து கேட்பது உயர்வு
கிடைத்தாலும் மகிழ்வோம்
கிடைக்கவில்லையென்றாலும் மகிழ்வோம்

இவர் வாடும் நேரம் வெகு தூரமில்லை

ஊரெல்லாம் கூட்டி விருந்து கொடுப்பார்
உண்டவன் உண்டதில் உப்பில்லை என்பான்
உப்போடு கொடுத்ததும் மகிழ்வைத் தரவில்லை
உண்டவனுக்கும் நன்றியுமில்லை

பசித்தவனுக்கு பண்டமில்லை யென்பார்
பார்த்தும் பாராமுகமாய் போய் விடுவார்
மிஞ்சியதை குப்பையில் கொட்டி விடுவார்
மிஞ்சியதையும் தந்துதவாமல் பாவத்தை சேர்த்து வைப்பார்.

Wednesday, 27 March 2013

'மீன் ஆனம் சரியாப் போச்சு!

'அத்தா பசிக்குது !.அம்மாவை பசியாற ராத்திரி மீன் ஆனம் கொடுக்கக் சொல்லுங்கப்பா!'

'மீன் ஆனம் சரியாப் போச்சு .சொன்னா கேளுடா ! விடியல் முன்பு எழுந்து பள்ளிவாசலுக்கு சென்று தொழ வேண்டுமென்ற ஆர்வமில்லை ஆனால் ஆனத்திலே மட்டும் ஆசை உனக்கு' என்று பையனின் அம்மா சொல்கிறாள்

பார்க்க வந்த நண்பர் காதில் இந்த சொற்கள் தாக்கியது போலும் .அவர் கேட்கிறார் .
'அத்தா ,பசியாற , ஆனம் ' இவை என்ன சொற்கள் புரியலையே!
நான் சொன்னேன் நாங்கள் அதிகமாக முறையாக தமிழ் சொற்களைத்தான் பயன்படுத்துவோம்.அவை உணவைவிட முக்கியமானது எங்களுக்கு.

இறைவனை வணங்கு என்றும் சொல்வதில்லை . இறைவனை தொழு என்றுதான் சொல்கின்றோம். இறைவனை தொழ பலர் சென்று தொழுமிடத்திற்கு பள்ளிவாசல் என்றும் சொல்கின்றோம்
.
'காலை டிபன் முடிந்ததா?'
' இன்று இரவு எங்கள் வீட்டில் டிபன் என்கிரார்கள் ' இந்த வார்த்தை
ஆங்கிலேயர்கள் மாலை நேரத்தில் ஒரு சிறிய பானம் அல்லது சிற்றுண்டி நொறுக்குத் தீனி தின்பதற்கு பயன்படுத்த நாம் அவர்களிடமிருந்து அந்த 'டிபன்' சொல்லை சோற்று உணவு சாப்பிடாமல் இருப்பதற்கு மற்ற இட்லி ,தோசை,வடை போன்ற உணவுக்கு  வழக்குச் சொல்லாக பயன்படுத்துகின்றோம். 

ஆத்மீகம் எளிய சேவை மற்றும் பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்


  மார்க்கத்தில் தன்னை தாங்கள்தான் மிகவும்  மார்க்கம் சொல்லியபடி வாழ்வை இணைத்துக் கொண்டதாக வறட்டு சடங்குகளில் வாழ்நாளை கழித்துக்கொண்டிருப்பார்கள். பெரிய ஞானம் பெற்றவர்களாக பெருமையடைவார்கள் அவ்விதம் மற்றவர்களும் நினைக்க வேண்டுமென்று அரும்பாடு பெற்று ஆதாயம் தேட முயல்வார்கள்

இன்று ஆத்மீகம் என்றால்!
தொழுகுமிடம் நாடிப் போவது ,
இறைவனைத் தொழுவது ,நோன்பு வைப்பது,
இறை வசனங்களை ஓதுவது
புனித பிரயாணம் மேற்கொள்வது,
இறைவனைப் பற்றியும் இறையடியார்களைப் பற்றியும் பேசுவது,
மார்க்க புத்தகங்களைப் படிப்பது ,மார்க்க சொற்பொழிவுகள் செய்வது, கேட்பது மற்றும் மார்க்கத்தைப் பற்றி பிறருடன் விவாதிப்பது,.
ஆன்மீகப்  பெரியவர் அடக்கப்பட்ட சமாதிக்குச் செல்வது , அந்த சமாதிக்கு முக்கியம் கொடுத்து அங்கேயே முடங்கிக் கிடப்பது மற்றும் ஆன்மீகப்  பெரியவர் பற்றி துதி பாடுவது.
மார்க்கத்தைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருப்பது
இப்படியே வாழ்நாளை போக்கிக் கொடிருப்பதுதான் என்று  சிலர் நினைக்கிறார்கள் அவ்விதமே சில மார்க்க போதகர்கள் மற்றவர்கள் மனதில் உறைய வைக்கிறார்கள்.

   .தன்னலம் ,மார்க்கம் ,ஆத்மீகம் ,சுவனம் பற்றி சிந்திப்போர் உடன் வாழும் மக்களை அறிவோர் இல்லை.அவர்களுக்கு உதவுவதுமில்லை. மார்கத்தோடு தம் வாழ்கையை குறுக்கிக்  கொள்கின்றார்கள்.இறைவனை அறிந்துக் கொள்ளும் ஞானம் வேத நூல்கலைப் படிப்பதனால் அதனை மற்றவருக்கு எடுத்து சொல்வதால் மட்டும் வருவதில்லை.தினசரி நாம் மக்களோடு பகிர்ந்துக் கொள்ளும் நேர்மையான உதவிக் கரம் நம்மை உயர்த்தி வைக்கும். எளிமையான வாழ்கை, அனுசரித்துப் போதல் ,தம்மால் முடிந்ததை மட்டும் செயல் படுத்த முயலவேண்டும். இல்லையெனில் விரக்தி வர ஆத்மீகம் அகன்றுவிடும் . ஆத்மாவை நேசித்து  அடுத்தவர்களுக்காகவும் நாம் விடும் மூச்சு இருக்க வேண்டும். ஆத்மீகம் எளிய சேவை மற்றும்  பக்தியிலிருந்துதான் துவங்க வேண்டும்  

உடன்பிறந்தோர் உறவு குருதியொடு கலந்த உறவு.

 மனதில் பட்டதை உன்னிடம் சொல்லி மகிழ்வதில் மன நிறைவு.

 அன்பு அண்ணனே  அருமையாக உன்னால் மட்டும் இப்படி எப்படி எழுத முடிகின்றது! காட்சியில் கண்டதையும் மனதில் நினைத்ததையும் அருவியாய் கொட்டி மற்றவரையும் மகிழச் செய்கின்றாயே! அந்த திறமையை  உனக்கு கொடுத்த  இறைவனை நினைத்து நன்றி சொல்லி நீ தொழுது வருவதனை  இறைவனும் அறிவான். இருப்பினும் ஒன்று என்னால் அறிய முடிகின்றது எச்சில் பால் குடித்த தம்பியானாலும் என்னால்  உன்னோடு இணையாக ஓடி வரமுடியாது, இறைவன் தான் விரும்பியவர்களுக்குதுத் தான் அதனை தந்தருள்வான்.அவன் கொடுப்பதும், எடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் நன்மையாகத்தான் இருக்க முடியும்.
 தொப்புள் கொடி பாசத்தினை நினைவினை நிறுத்தி கவிதை வடிக்கின்றாய். அதனை உன்னால் நீ நினைத்தாலும் நிறுத்த முடியாது. வந்து சேர்ந்தவள், ஒட்டிக் கொண்டவள் நமது உறவை அறுக்க நினைத்தாலும் முடியாது. காரணம் நம்முறவு குருதியொடு கலந்த கலவை. .குருதி ஓடும்வரை உறவும் ஒட்டிக் கொண்டே ஓடும். நீ ஓடிக்கொண்டே இரு அதனை கண்டு ஆசை அடங்காமல் உன்னைக் கண்டு மனம் மகிழ உன் பின்னே நானும் ஒடிவருவேன்.

Monday, 25 March 2013

ஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்

ஏதுண்டு உம்மிடத்தில் என்பார்?
வேதமுண்டு எம்மிடத்தில் என்போம்
வேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்?
பேதமை எம்மனதில்  ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று

சேதம் வராமல் சேர்த்து வைத்தேன்
கல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது
சேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது
கல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்

ஒற்றுமையில் சிக்குண்டு நம்மில் நாமே மோதுண்டோம்.
ஒற்றுமையின்  உயர்வை  வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது
புல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்
 வேதம் அறிந்து கல்விகற்று  களையடுக்க வேண்டும்

உலகம் சுற்ற ஆட்சி முறையும் சுற்றுவதுதான் விதி

அம்மாவின் கருவின் நீர் தடாகத்தில்
அம்மாவின் அறிவின் ஊற்றில் மிதந்து
அம்மாவின் அறிவை கருவிலேயே உள்வாங்கி
அம்மாவின் மனம் மகிழ வந்துதுதித்த கவிஞன்

கவிஞன் பிறக்கிறான் கருவறையில் கற்பிக்கப்பட்டு
கலைஞன் கற்கிறான் கண்டதையும் கற்று
நடிகன் நடிக்கிறான் கண்டதையெல்லாம் பெற்றுவிட
பேச்சாளன் உருவாகிறான் தனக்குத்  தானே

அரசியல்காரன் அடுத்த தேர்தலை சிந்திக்கிறான்
நல்லாட்சி தர விரும்புபவன் பரம்பரையை  சிந்திக்கிறான்
சொல்லாட்சி கற்று பொய்சாட்சி சொல்கிறான்
மக்களாட்சி வேண்டி மக்களாட்சியை கலைக்கிறான்

உலகம் சுற்றுவதுபோல் ஆட்சி முறையும் சுற்றும்
மன்னராட்சி கெட மன்னர் கொடுங்கோலனாக மாற
மன்னராட்சியை கலைத்து உயர்ந்தோர் ஆட்சிக்கு வர
உயர்ந்தோர் உயர்வைப் போக்க கொடுங்கோலன் கையில் ஆட்சியை அடைய
மக்கள் புரட்சியால் மக்களாட்சி மலரும்
மக்களாட்சியில் ஊழல் வர திரும்பவும் சுழர்ச்சி முறைதான்
உலகம் சுற்ற ஆட்சி முறையும் சுற்றுவதுதான் விதி 

எனக்கு தேவையானது எல்லாம் பெற்றேன்

நான் வலிமை கேட்டேன் .........
இறைவன்  எனக்கு சிரமங்களை கொடுத்து   என்னை வலுவாக்கி   அதனை சமாளிக்க வழி செய்தான்.
நான் அறிவு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத்  தீர்க்க முறை செய்தான்.
இறைவனிடம்  வளமாக  வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........
இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..
ஆண்டவனிடம்  தைரியமாக வாழ வழி கேட்டேன் .........
ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.
நான் மக்களின் அன்பு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு சிக்கலுக்குள்ளான மக்களை  கொடுத்து அவர்களுக்கு உதவச் செய்து பாசமுண்டாக்கினான்  
இறைவனிடம் நான் வளமான வாழ்வு பெற  அவனது அருள் கேட்டேன் ...
ஆனால் அல்லாஹ் அதற்குரிய வாய்ப்புகளை கொடுத்து அதனைத் தேடி அடைந்துக் கொள் என்றான்.    
நான் விரும்பிய எதுவும் கிடைக்க்கவில்லை
ஆனால்  எனக்கு  தேவையானது எல்லாம் பெற்றேன்
என் பிரார்த்தனை இறைவனால் வேறு வகையில் அங்கீகரிக்கப் பட்டதில் மகிழ்ந்தேன்
அல்ஹம்துளில்லாஹ்

Sunday, 24 March 2013

முடிவின் இருதியே முழுமையின் துவக்கம்.

 முழுமை எதில் உள்ளது ! முடிவின் இருதியே  முழுமையின்  துவக்கம்.  குறை  இல்லாத மனிதனைப் பார்க்க முடியுமா ! .குறையிலும்   நிறையினைக் காண்பவனே சிறந்தவன் . முழுமையாக கிடைக்கவில்லையயே என ஆதங்கப்படுவதைவிட கிடைத்ததைக் கொண்டு  நிறைவு அடைந்தவன் வாழ்வே மகிழ்வாக அமையக் கூடும் . தாகம்  தீர்க்க நீர் நாடி வேண்டுவோர்  கிடைத்த நீரைக் கொண்டு தாகத்தினை தீர வழி உண்டாகிக் கொள்வார்கள் . அதன் வேகம் படிப் படியாக குறைவதனை உணர்வார்கள் . எது தேவைக்கு  அதிகம் கிடைத்தாலும் அதன் மதிப்பு குறைவதனைக் காணலாம் . கடைத்தெருவில் பொருட்கள் அதிகம் வந்து சேர்ந்தாலும்  ஒரு பொருளின் விளைச்சல் அதிகமாகிவிட்டாலும் அதன் மதிப்பு குறைவாக போய்விடும் நிலை என்பது உண்மை . வாழ்வின் தத்துவமும் இதில் அடங்கும் . நாம் நினைத்தது  முழுமையாக கிடைக்காது  அப்படியே  அது கிடைத்து விட்டாலும்  அதன் சுவையை ,மகிழ்வை நாம் அனுபவிக்க முடியாது .

 குறையும் நிறையும் உள்ளடக்கியதே வாழ்வின் மகத்துவம் .திருமண வாழ்வும் அதைச் சார்ந்ததுதான் . நம்மால் முடிந்தவரை  வாழ்வை மகிழ்வாக்கிக் கொள்ள  விட்டுக் கொடுக்கும் மனதுடன்  நல்லதை பாராட்டி கெட்டதை  மறந்து  சிறப்போடு  வாழ  முயல வேண்டும் . கணவனும் மனைவியும் முழுமையாக பிடித்தவர்காக ஒருபோதும் சிறப்பாக வாழ்வை அமைந்துவிட முடியாது. கிடைத்த வாழ்வை சிறப்பாகிக் கொள்ள முயல்வதே சிறந்த வாழ்வு . வாழ்க்கை என்பது பொருள் கொடுத்து வாங்கும் பொருளல்ல.அது மனதைச் சார்ந்தது.வாழும் முறையைப் பொருத்தது.
இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.

பாசம்காட்டி பணிவிடை செய்து ஆசிரியராய் இருந்து உருவாக்கியவள்!

 இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும்  அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு உரு துணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.


பெண் குழந்தையாக இருக்கும் போது வீடு கட்டி விளையாடுவாள் பின்பு பூச் சூடி மகிழ்வாள். அந்தப் பூவின் மனம் மகிழ ஒரு மணமகனை நாடுவாள். அந்த மணமகன் கிடைத்த பின்பு தான் மணம் வீசும் மலராக இருந்து அவனது மனம் மகிழ வைப்பாள். அவனால் கிடைத்த பரிசான பிள்ளைகளை பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து வந்த தாயாகவும் கணவனுக்கு சேவை செய்யும் மருத்துவ தாதியாகவும், அக மகிழ வைக்கும் இனிய இன்பம் தரும் இல்லக்கிழத்தியாகவும், விடியல் விழித்திடும் முன்னே விழித்து சுவையுடன் சமைத்து தரும் அடுபன்கரை அரசியாகவும் இருந்து தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைக்கின்றது.

இறைவா ! உன்னிடமே நான் யாசிக்கிறேன்!


உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்

உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி நான் ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி நீ ஓடி வருவாய்

சிந்தனைகள் ,கருத்துகள் .தூண்டுதல்கள்  அனைத்தும்  இறைவனது அருட்கொடை அது  உங்களின் ஒருவனாக நானும்  இருப்பதின்  வெளிப்பாடு . பிறப்பது இருவரின் கூட்டு முயற்சி. பிறந்தவுடன் அரவணைத்து  வாழ்த்துவோர் அநேகம் . அவர்களின்  வேண்டுதல்களை நாடும் ஒருவனாக  இருப்பதிலேயே  உயர்வின்  அடித்தளமாக அமையும் . தூற்றுவோர்  இருக்க துவள வேண்டியதின்  நிலைப்பாடு  வேண்டாம் . வாழ்க்கை முடிந்த பின் தூக்கிச்  செல்வோர்  வசை பாடி இசை பாட  இறைவனும்  என்னை  கனலில் விட்டு  விடுவதை நான் அஞ்சுகிறேன். தென்றலாய்,  தேன் மதுரச் சுவையாய்  உளமார வாழ்துதலாய் இருக்கட்டும்  உங்கள்  வாய்  மொழி.

நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லை - எனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள் [குர்ஆன் 10:44]

கவலை ஆக்கத்திற்கும் வழி வகுக்கும்!

கவலைப் படுதல் வாழ்வின் ஒரு பகுதி. கவலையற்றோர் உலகில் யாருமில்லை. கவலை வருவதற்கு பல காரணங்கள் உண்டு
1. எடுத்த காரியம் முடியவில்லையே என்ற கவலை .
2. பொருளாதாரத்தினால் வருவது
3. கல்வி சம்பந்தப் பட்டது
4, திருமணம் பற்றியது
6. குடும்பம் மற்றும் மனைவி மக்களைப் பற்றியது
7. மற்றவர்கள் நமக்கு கொடுக்கும் தொல்லைகளால் வருவது .
8. கடந்த காலம் வீணாகப் போனதே என்று நினைத்து வேதனப் படுவது
9. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திப்பது
10 மற்றவர்களுக்காக கவலைப் படுவது (ஒரு சிலர் )
11. நாட்டுக்காக உண்மையிலேயே கவலைப்படுவது (சரித்திரத்தில் பார்க்கலாம் )
12. அளவிற்கு மீறிய ஆசை கவலையை உற்பத்தி செய்யும் இடமாகின்றது

'குழிப் பிள்ளை மடியில்'

'குழிப் பிள்ளை மடியில்'
அழகிய முதல் பேத்தி எனக்கும் இருந்தது. அது ... ஆறு மாதத்தில் மருத்துவ முறைகேடால் இறந்தது. நான் என்னை இழந்தேன், மனம் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்தேன்.எதைக் கண்டாலும் பயம் .ஒரு குழந்தை ஓரமாக நடந்து போனால் விழுந்து விடுமோ! என்ற பயம் இன்றும் உள்ளது .கற்பனை வியாதிகள் மனதில் ஊடுருவி வாழ்வையே வேதனையாக்கியது . ஒரு நண்பர் அழகாகச் சொல்லி ஆறுதல் தந்தார் 'குழிப் பிள்ளை மடியில்' என்று. அதுவே இறைவன் அருளால் நடந்தது .மனதிலும் தெளிவு வந்தது . இறைவன் செய்வது நன்மையாகவே அமையும். நம் வேலை இறைவனிடம் வேண்டுவது அவர்களுக்காக'துவா' செய்வது. 'ஒட்டகத்தை கட்டு இறைவனை வேண்டு' நபி மொழி .நாமும் கவனமாக இருக்க வேண்டும் இனி தவறு நடக்காமல் இருக்க.


One day Prophet Muhammad (peace be upon him) noticed a Bedouin leaving his camel without tying it and he asked the Bedouin, “Why don’t you tie down your camel?” The Bedouin answered, “I put my trust in Allah.” The Prophet then said, “Tie your camel first, then put your trust in Allah” (At-Tirmidhi).

Sometimes we can very easily forget that we have to do our bit in our endeavours as well; effort and struggle is required from us if we truly want to achieve or attain something…….. (A reminder for myself first and foremost)

Saturday, 23 March 2013

விரும்பியும் விரும்பாமலும் வந்திருப்பேன் !.

நீ விரும்பியும் நீ விரும்பாமலும் வந்திருப்பேன் .
உதைத்தேன் சிரித்தேன் உணர்ந்தாய்  மகிழ்ந்தாய்
கொடுத்த இடம் பத்து மாதம் தான் அதற்கு மேல் தரமாட்டாய்
அதிகம் இருந்தால் அறுத்து தள்ளிவிடுவாய்

விழுந்தேன் அழுதேன் அரவணைத்தாய் அடங்கினேன்
வளர்ந்தேன் ஓடினேன் விளையாடினேன்
பறந்து வந்து கொசு ஊசி போட துயருற்றேன்
மருத்துவர் வந்து   ஊசி போட்டும் துயருற்றேன்
போட்ட  ஊசி பயனில்லை மாண்டுபோனேன்

சில துளி நேரங்கள் தூங்கியதர்க்கே இத்தனை சாட்டையடி !

மன்னன் அறையை சுத்தப்படுத்த சென்ற பெண் வேலையின் அயர்வினால் தன்னையறியாமல் மன்னனின் படுக்கையில் சாய்ந்து உறங்கிவிட்டாள் . மன்னன் தனது படுக்கையில் பணிப்பெண் உறங்குவதைக் கண்டு வெகுண்டு அவளுக்கு தண்டனையாக சாட்டையால் அடிக்க அப்பணிப்பெண்  சிரித்துக் கொண்டே இருந்தாள்.
மன்னனுக்கு கோபம் அதிகமாக நான் அடிப்பது உடலில் நோவு தரவில்லையா! சிரிக்கின்றாயே என்றான்.
 அதற்கு அப்பணிப்பெண் "சில துளி நேரங்கள் தூங்கியதர்க்கே இத்தனை சாட்டையடி ஆனால் காலமெல்லாம் நீங்கள் இதில் உறங்குகின்றீர்கள்  உங்களுக்கு இறைவன் கொடுக்கப் போகும் தண்டனையை நினைதேன்,அதன் நிமித்தம் சிரிப்பு வந்தது" என்றாள்
மன்னன் தன் தவறை உணர்ந்து அப்பணிப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டான்.இறைவனிடன் பாவமன்னிப்பு தேடி வேண்டினார்

நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்!

அன்போடு அழகாக  வந்து “நான் எப்படி இருக்கிறேன் சொல்லுங்கள்” என்றாள்.

“என் அன்பு தேவதையே நீ ஒரு  அ  ஆ  இ  ஈ உ ஊ எ ஏ ஐ  ஒ ஓ ஔ  ஃ”  என்றேன்.

“நான் என்ன ஒரு ரிச்சுவடியா! ஒன்றும்  அறியாதவளா? ” என்றாள்.

“அரிசுவடியில்தான் எல்லாமே ரம்பமாகின்றது . உன்னை வைத்துத்தான் குடும்பமே தொடர்கின்றது.

நீ ல்லையெனில் நானில்லை” என்றதுடன்
“நீ என் அன்பானவள் ,ஆசைநாயகி .இனியவள் .
உன் மீது எனக்கு உள்ள டுபாடு அதிகம் அளவற்றது” என்று அன்புடன் ஆசைகொண்டு இனிய ஈடுபாட்டுடன் யிராக டல் கொண்டேன்.
அவள் இதயம் இப்போது ன் வசம் ஆகும் என நம்பினேன்.
ஆனால் அவள் நம்பவில்லை. கோபம் கொப்பளித்தது.அனல் பார்வை. இயற்கையான பிடிவாதம் . வாதத்துக்கு மருந்துண்டு. பிடிவாதத்திற்கு மருந்தேது!  என்னிலை பரிதாபமானது.வேடிக்கை விபரீதமானது. எல்லாம் மாற்றம்.ஐயகோ! என் செய்வேன் .என்னிலை பரிதாபமானது.
ட்டலின்றி ட்டமெடுத்தேன் எகான உள்ளத்தோடு ளடதம் (மாற்று மருந்து) நாடி .கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்றார் ஔவை அதை முறைபடுத்தாமல் போனதை நினைத்து வருந்தினேன்


சீன ஏழை விவசாயி தன் மனைவியுடன் கடுமையாக உழைத்து பணம் ஈட்டி செல்வந்தன் ஆன பின் கடுமையாக வயலில் உழைத்ததினால் அவனது மனைவியின் அழகு குறைய அவன் வேறு பெண்ணை நாடி செல்கின்றான் . அவனது  மனைவி மிகவும் மன வேதனை அடைகின்றாள்.
பள்ளிக்கூடம் செல்லும் தன் மகளுக்கு சூ  மாட்டி விடும்போழுது அந்த பெண் குழந்தை வலி தாங்காமல் கதறுகின்றாள் .அப்பொழுது தாய் சொல்லும் வார்த்தை “மகளே  இந்த  வலியினை தாங்கிக் கொள் உனக்கு திருமணம் ஆன பின் உன் கால் அழகாக இல்லை என்று உன் கணவன் உன்னை விட்டு பிரிந்தால்  அந்த மன வலியினை உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என  அழுகின்றாள்.

விழி பேசும் கண்ணாடி

வாள் வீச்சில் வீழ்ந்தால் மரணம்
விழி வீச்சில் வீழ்ந்தால் மயக்கம்

மரணம் வரின் மடிதல்
மயக்கம் வரின் தெளியும்

மரணத்தில் ஒரே முடிவு
மயக்கத்தில் பல பிரிவு

மனதை கவரும் மயக்கம் காதல்
மனதை சுண்டும் மயக்கம் மாந்தரின் விழி வீச்சு

விழி பேசும் கண்ணாடி
விழி மயங்கவும் வைக்கும்

ஒலையாக உன்னிடம் தந்துவிட்டேன்!

அண்ணனும் நீயே ஆசிரியரும் நீயே
அண்ணனாக வழிகாட்டினாய்
ஆசிரியராக கற்பித்துக் கொடுத்தாய்
தவறு  செய்தால் தண்டித்தாய்
பிழை இருந்தால் திருத்தினாய்
அன்பை வளர்த்தாய்
ஆர்வத்தை தூண்டினாய்
நண்பனாக நான்கு இடமும் காட்டினாய்
முதல்வனாக இருந்து குடும்ப பாரத்தை சுமந்தாய்
இளவலான என்னை ஏவி துணையாக இருக்கச் சொன்னாய்
ஏவியதை இயன்றவரை செய்துத் தந்தேன்

எனக்கொரு இல்லாளை இருவரும் தேடித் தந்தீர்
எனக்கென்று வந்தவள் என் நெஞ்சோடு கலந்தவளை
உனக்கென்று உடையவளுக்கு அது உகந்ததாகவில்லை
நீங்கள் பார்த்து எனக்கு முடித்து வைத்தவள்
நீ முடித்தவளுக்கு  பிடிக்காமல் போனது
நான் முடித்தவள் செய்த குற்றம் என் குற்றமாகாது
குற்றத்திற்கு ஒரு குற்றம் பெருக வேண்டாம்

என் உயிரில் விளையாட யார் வருவாரோ!

உலவி வர சிறிய இடம்
உலவும் போது இடிப்பதில்லை
உன்னைக் கண்டு நான் மகிழ
உணவைத் தேடி நீ அலைய
உயிர் வாழ உணவு கொடுப்பேன் 
உயிர் வாழ நீர் மாற்றம் செய்வேன்
நிறம் நிறமாய் வாரிசு கொடுத்தாய்
வாரிசு உன்னை வளம் வரும்
வேதனை அறியா உள்ளம் பெற்றாய்
பெற்றது அறியா உள்ளம் கொண்டது
நான் என் மகிழ்வை அடைய
நான் கண்ணாடிப் பேழையில் விட்டு வைத்தேன்
நான் அறியேன் அதுவே உனக்கு கடுஞ்சிறையென
உன் உயிரில் நான் விளையாட
என் உயிரில் விளையாட யார் வருவாரோ!

Thursday, 21 March 2013

அன்புமயமாக இவ்வுலகை ஆளும் யாஅல்லாஹ்! Praise be to God, Lord of the universe

அன்புமயமாக இவ்வுலகை ஆளும் யாஅல்லாஹ்!
[Quran 1:2] Praise be to God, Lord of the universe.

[Quran 36:36] Glory be to the One who created all kinds of plants from the earth, as well as themselves, and other creations that they do not even know.

[Quran 6:1] Praise be to God, who created the heavens and the earth, and made the darkness and the light. Yet, those who disbelieve in their Lord continue to deviate.

[Quran 17:111] ...."Praise be to God, who has never begotten a son, nor does He have a partner in His kingship, nor does He need any ally out of weakness," and magnify Him constantly.

[Quran 52:43] Do they have another god beside God? God be glorified, far above having partners.

[Quran 27:93] ..."Praise be to God; He will show you His proofs, until you recognize them. Your Lord is never unaware of anything you do."

குழந்தையை தாலாட்டு பாடி உறங்க வைக்க.


இசையில் மயங்காதவர் யார் ! நல்ல இசையோடு சிறந்த கருத்துகளை அந்த இசையில் சேர்த்து பாடும்போது மனதுக்கு மகிழ்வைத் தருவது இயல்பு.
குழந்தையை தாலாட்டு பாடி உறங்க வைப்பது நமது பண்பாடு,
தாய்மார்கள் பாடும் தாலாட்டில் மயங்கி தூங்காத குழந்தை இல்லை என்றே சொல்லலாம்.
ஆராரோ ஆரரிரோ என்று தாய் பாடல் பாடி கேட்காத குழந்தை இல்லை.

Wednesday, 20 March 2013

பாரிஸ் பயணம் - Paris Trip

"The world is a book, and those who do not travel read only a page." . - St. Augustine"
 

"He who does not travel does not know the value of men." -- Moorish proverb
 


முத்தங்கள் பல வகை.

முத்தங்கள் பல வகை.நெற்றியில் கொடுக்கும் முத்தம் பாசத்தை வளர்க்கும்.

.முதல் முத்தம் மறக்க அடுத்த முத்தம் தொடரும் .ஒரே முத்தம் முழுமையாகிவிடாது முத்தத்தைப் பொறுத்தவரை . தொடர, தொடர தெவிட்டாதது முத்தம்தான்.அது மனதோடு தொடர்புடையதால் எண்ணங்கள் மாற சுவையும் மாறும். முத்தம் கொடுக்கப்பட்டவரின் உறவுடனும், இடத்தினையும் பொருத்து சுவையும், உணர்ச்சித் தூண்டுதலும் மாறுபடும்.

“தாயின் மடியில் சுவனம் உள்ளது” என நாயகம் நவின்றார்கள.

தாயின் முத்தம் பாசத்தை வளர்க்கும்
தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல்,அவர்களிடையே மன அழுத்தம் குறையும். தான் முத்தம் கொடுக்கவோ, தனக்கு முத்தம் கொடுக்கவோ யாரும் இல்லையே! என்ற சோகம் கொடுமையானது. கட்டியவளிடம் நிகழும் காலத்தையும்
பெற்றோரிடம் கடந்த காலத்தையும்
மனம் மகிழ மனம்விட்டு கதைக்க வேண்டும்

Tuesday, 19 March 2013

உங்கள் வாழ்க்கைப் பயணம் உயர்வடைய...,

செயல்பாடு மன வலிமையோடு தொடங்கட்டும் 

எண்ணங்கள் உயர்வாக தொடரட்டும்

 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். ஸஹீஹுல் புகாரி 1

பேசுவது மென்மையாக இருக்கட்டும்
(தேவையின்றி) அதிகமாகப் பேசுவது, அதிகமாகக் (கேள்வி, அல்லது யாசகம்) கேட்பது, செல்வத்தை வீணாக்குவது ஆகியவற்றை அல்லாஹ் வெறுத்துள்ளான்.
என முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.ஸஹீஹுல் புகாரி 5975.

நடை தாழ்மையாக நடுநிலையாக  இருக்கட்டும்
கேட்பதில் பொறுமையைக் கைப்பிடித்தல்  வேண்டும்
நம்பிக்கை சரியாக இருக்கச் செய்தல் சிறப்பு
உடை மிடுக்காக உடுத்துவது உயர்வு
செய்யும் வேலை உண்மையாக இருக்கட்டும்
நினைப்பது தர்க்கரீதியாக இருக்கட்டும்
திட்டம் வகுப்பதில் சிந்தனை செயல்படட்டும்
பொருள் ஈட்டுவதில் நேர்மை நிலவட்டும்
சேமிப்பு தொடர்ந்து செயல்படட்டும்
செலவு செய்வதில் அறிவு செயல்படட்டும்
உண்பதில் முறையாக இருக்கட்டும்
தூக்கம் தேவையானதாக   இருக்கட்டும்
சாதிப்பது சரியாக இருக்கட்டும்

Monday, 18 March 2013

இறைவனை தொழுதிடு உன் கடமையை செய்திடு

தொல்லைகள் நம்மை தாக்கும்
தொல்லைகள் கவ்வ துயரம் சேரும்
துயரம் சேர மனம் தொய்வு விழும்
மனம் சோர ஆர்வம் மறையும் .

வேண்டியது கிடைக்க மனம் மகிழும்
வேண்டாதது கிடைக்க மனம் துவளும்
வேண்டியவருக்கு வேண்டாதது கிடைப்பதும்
வேண்டாதவருக்கு வேண்டியது கிடைப்பதும் இயல்பு

நினைத்த தெல்லாம் கிடைத்தால் வாழ்வில் வேகமில்லை
நினைத்தது கிடைக்காமலிருப்பதும்
நினைத்தது கிடைப்பதும் நம் கையில் இல்லை
கிடைத்ததைக் கொண்டு மகிழ்வு கொள்வது உயர்வு


இறைவனை தொழுதிடு அவன் படைத்ததர்க்காக
இறைவன் கொடுத்ததை மகிழ்வாக ஏற்றுக் கொள்
இறைவன் கொடுக்காமல் இருப்பதிலும் நன்மை இருக்கும்
இறைவனை தொழுதிடு உன் கடமையை செய்திடு

சுவனம் கிடைக்க  காரணம் வைத்து இறைவனை தொழுதல் சிறப்பல்ல
நரகம் கிடைக்காமல் இருக்க இறைவனை தொழுவதும் உயர்வல்ல
படைப்பின் ஆற்றல் பெற்றவன் இறைவன்
படைத்தவனுக்கு எது கொடுக்க வேண்டுமென்பது தெரியும்
படைத்ததர்க்காகவே இறைவனை தொழுது ஆத்மா திருப்தி கொள்

வாழ்வில் இனிய சுமை !


 வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. தன் குழந்தையை சுமப்பது மகிழ்வு தந்தாலும் அதைவிட பேரின்பம் தன் பேரக்  குழந்தைகளை  சுமப்பது. அதிலும் மகள் வழி பேரக்  குழந்தைகளை  சுமப்பது மிகவும் மகிழ்வு தரக் கூடியது. இவைகள் சுமைகள் அல்ல .நமக்கு மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள்.   இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும்  நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.

Guadeloupe குவாதிலோப்

குவாதிலோப்  பிரஞ்சு நிலப்பகுதியில் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்படுகிறது
 க்வாதேலோப்-கரீப் இந்திய "கருகிற " மக்கள்,  "அழகான கடல் தீவு" , க்வாதேலோப்  பிரஞ்சு பிரதேசத்தில் கரீபியன் கிரியோல் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது.
முக்கிய வருமானம் சுற்றுலாத் துறையால் கிடைக்கிறது
பிரஞ்சு நாட்டு மக்கள் வருகை அதிகம்
பிரஞ்சு, ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் தாக்கங்கள் அதன் இசை, நடனம், உணவு உட்புகுத்து மற்றும் மொழியில் பரவலாக பேசப்படுகிறது.
     தகுதி: பிரான்ஸ் வெளிநாட்டு துறை
     மக்கள்:தொகை சுமார்  463,000
    பரப்பளவு : 1.705 சதுர கிமீ (658 சதுர மைல்)
     முக்கிய மொழிகள் : பிரஞ்சு (அதிகாரப்பூர்வமானது ), கிரியோல் பேச்சு
     பெரிய மதம்: கிறித்துவம்
     ஆயுள்: 76 ஆண்டுகள் (ஆண்கள்); 84 ஆண்டுகள் (பெண்கள்)
     நாணய புழக்கம் : யூரோ
     முக்கிய ஏற்றுமதி: வாழைப் பழம் , சர்க்கரை, ரம், வெண்ணிலா
     சர்வதேச அழைத்தல் குறியீடு நம்பர் எண் : +590

Sunday, 17 March 2013

In The Name Allah

உன்னையே நேசிக்கிறேன்
உன்னையே .(உன்னிடமே) யாசிக்கிறேன்
உன்னையே நாடுகிறேன்
உன்னையே போற்றுகிறேன்

உன்னையல்லால் யார் உதவுவார்
உன்னையல்லால் யாரைக் கேட்போம்
உன்னை நாடியோர் கை விடப்படார்
உன்னை நோக்கி நான் ஓர் அடி வைத்தால்
என்னை நோக்கி நீ ஓடி வருவாய்