Thursday, 11 March 2021

#மிஹ்ஹ்ராஜ்_அதிசயம் .../ Abu Haashima

 


Abu Haashima


இன்று மிஹ்ராஜ் தினம்.

மிஹ்ராஜ் என்றால் உயருதல் என்று பொருள்.

இஸ்லாத்திற்காக ஏராளமான இன்னல்களை அனுபவித்து வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

மன வருத்தமுற்று இருந்தார்கள்.

அதுவரை அன்பு காட்டி ஆதரித்து வந்த பெரிய தந்தை அபூதாலிப் அவர்கள் இறந்து விட்டார்கள்.

அவர்கள் இறந்த சில நாட்களிலேயே கண்ணின் மணியாய் தங்கள் காதல் மணாளராய் திகழ்ந்த கண்மணி நாயகத்தை கண்ணின் இமைபோல் காத்துவந்த நம் அன்னை கதீஜா நாயகியார் அவர்களும் இறைவனளவில் சேர்ந்து விட்டார்கள்.

பெருமானாருக்கு

தங்கள் பாசத்துக்கு உரிய உறவுகளைப் பிரிந்து பரிதவிக்கும் பரிதாப நிலை ஒருபுறம் .

தங்களை கொலை செய்வதற்கே நாள் பார்த்துக் கொண்டிருக்கும் குறைஷியரின் கொடூர நிலை மறுபுறம் .

அல்லாஹ்விடமே தங்கள் மன வேதனைகளை கொட்டி வழி காட்ட வேண்டிக் கொண்டிருந்தார்கள் நபிகள் .

அருளாளன் அல்லாஹ் நபிகளாரின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டான். அவன் தன் அருட் கொடைகளால் தன் ஹபீபை ஆற்றுப் படுத்தினான்.

அகத்தில் ஆண்டவனை

வழுத்தி வாழ்ந்த வள்ளலுக்கு

அர்ஷின் நாயகன்

அழகான அழைப்பொன்றை

அனுப்பி வைத்தான் !

பாவிகளிடமும்

ஈனர்களிடமும்

அவதிப்பட்ட அண்ணலுக்கு

அன்பிறைவன் அனுப்பி வைத்த

அர்த்தமுள்ள அழைப்பதனை

அமரர்கோன் ஜிப்ரயீல் கொண்டு வந்தார் !

ரஜப் மாதத்தின்

இருபத்தேழாம் இரவில்

ஊருறங்கும் நேரத்தில்

சொர்க்கத்தின் வாகனம்

ஃபுராக்

அண்ணல் வீட்டு வாசலில் வந்து நின்றது !

கஃபாவின் சுவரோரம்

அண்ணலின் இதயம்

அமரர்களால்

பக்குவப் படுத்தப்பட்டது !

உலகின்

முதல் இருதய அறுவை சிகிச்சை

அண்ணலிடம்தான் ஆரம்பமானது !

பக்குவப்பட்ட இதயத்தோடு

இறைவனை தரிசிக்கும் 

இனிய பயணத்தை

இனிய நபிகள் இனிமையோடு

ஆரம்பம் செய்தார் !

மக்காவில் புறப்பட்ட ஃபுராக்

மஸ்ஜிதுல் அக்சாவுக்கு வந்தது !

அங்கிருந்துதான்

ஜிப்ரயீல் முன்னே செல்ல

வாகனம்

வானமேறி பறந்து சென்றது !

வாழ்த்துக்களோடு

மண்ணகம் விடை கொடுக்க

விண்ணகம் ஏறி வந்த வள்ளல் நபி

வருகின்ற வழியெல்லாம்

வாழ்ந்து மறைந்த

நபிமாரைக் கண்டார்கள் !

நல் வாழ்த்துக்களைப் பெற்றார்கள் !

கடைசி விழுது

வேர்களையும் கண்டு மகிழ்வதைப்போல

முந்திய நபிமாரைக் கண்டு

முகமன் கூறி

அகமனம் களித்தார்கள் !

அண்ணலின் உள்ளங்கையில்

உலகத்தை

இறைவன்  ஒன்று சேர்த்தான் !

முகவுரையிலிருந்து

முடிவுரை வரை

உலகம்

அண்ணலிடம் தன்

வரலாறை ஒப்பித்தது !

சொக்க வைக்கும் சொர்க்கமும்

நடுங்க வைக்கும் நரகமும்

நன்மை தீமைகளின் பரிசுகளோடு

மனிதர்களை வரவேற்கக் காத்திருப்பதை

நாயகம் கண்டார்கள் !

ஆதியும் அந்தமுமில்லா

அற்புதனின்

அதிசயப் படைப்புகளில்

ஆன்மீக ஞானத்தின்

முழுப்பாடத்தையும்

அண்ணல் பயின்றார்கள் !

அற்புதங்கள்

அதிசயங்கள் அனைத்துமே

ஆதி இறைவன்

ஆகுக என்றால்

ஆகிவிடும் அந்த

ஆனந்தப் பரவசத்தில்

அகம் குளிர உணர்ந்தார்கள் !

ஆக்கவும்

அவற்றை அழிக்கவும்

ஆற்றல் பெற்றவன்

அல்லாஹ் ஒருவனே

எனும் ஒப்பற்ற தத்துவத்தை

நபிகள்

அகத்தாலும் புறத்தாலும்

அறிந்தார்கள் !

அல்லாஹ்வின் அன்பளிப்பாய்

ஐவேளைத் தொழுகை

அடியவர்களுக்கு அருளப்பட்டது !

அல்லாஹ் வாழ்த்தினான் !

அமரர்கள் வாழ்த்தினார்கள் !

அகிலத்தின் அனைத்து ஜீவராசிகளும்

மாநபி மாண்புக்கு

வாழ்த்துக்கள் கூறின !

அண்ணலின் வருகையால்

சொர்க்கம் பரவசப்பட்டது !

தான் படைக்கப்பட்டதின்

பேருண்மையை

அண்ணலின் முகம் பார்த்து

தெரிந்து கொண்டது !

நல்லார் நாயகம் முகம் காண

நரகம் நாணப்பட்டது !

அத்தஹியாத் எனும்

அற்புதமொன்றை

அண்ணலுக்குப் பரிசளித்து

ஆண்டவன் மகிழ்ந்தான் !

வானத்தையும் வையத்தையும்

படைத்து வைத்த

பெருங்கருணைப் பெரியோனைப்

புகழ்ந்தபடி

பெருமானார் தங்கள் இல்லம் புகுந்தார்கள்  !

தங்கள் படுக்கையில்

தாங்கள் விட்டுச் சென்ற

உடலின் சூடு ஆறுவதற்கு முன்

விண்ணகப் பயணம்

முடித்து வந்த அதிசயத்தை எண்ணி

ஆற்றல்களின் அதிபதியாம் அல்லாஹ்வை

மீண்டும் மீண்டும் துதித்தார்கள் !

விண்ணகம் சென்று வந்த விந்தை நிகழ்வை

விடிந்தும் விடியாதக் காலைப் பொழுதில்

குறைஷியர் காதுகளில்

கோமான் நபிகள் போட்டு வைத்தார் !

ஆடையணியாத ஊரில்

ஆடைகட்டிய அழகாய்

அண்ணல் திகழ்ந்தார்கள் !

அரபிகள் அதை

அருவருப்பாய் உணர்ந்தார்கள் !

ஆகாரத்தின் சுவை தெரிந்த

அரபு மக்கள்

ஆன்மீகத்தின்

அகரத்தைக் கூட

அறிய முற்படவில்லை !

அதனால் ...

அண்ணலின் கூற்று அங்கே

எடுபடவில்லை !

குறைஷிகள் குரைத்தார்கள்

கோபத்தில் குதித்தார்கள்

குள்ள நரிபோல் சிலபேர்

குதறிப் பார்க்கவும் துணிந்தார்கள் !

அண்ணலைப் பார்க்கு முன்பே

அபூபக்கர் சொன்னார் ...

" நபிகள் வானகம் சென்று வந்ததாகச்

சொல்லியிருந்தால்

அது உண்மை !

உண்மையைத் தவிர வேறில்லை !"

அண்ணலின் இதயம் மலர்ந்தது !

அப்துல் கஃபா

ஆயிஷாவின் தந்தையாய்

அபூபக்கரானார் !

அண்ணலின் மிஹ்ராஜ் பயணத்தை

உண்மைப் படுத்தி

சித்தீக்கும் ஆனார் !

ஈமான் எனும் நம்பிக்கைச் சாறு

அபூபக்கர் இதயத்தில்

வான்மழையாய் இறங்கியது !

இஸ்லாத்தின் உதயத்தை

இதயத்தில் தாங்கிய பூமான்

அபூபக்கர் சித்தீக்

ஈமானின் ஒட்டுமொத்தத்

தளபதியுமானார் !

இது மிஹ்ராஜ் எனும் அதிசயம் !

இது சொல்லித் தரும் பாடம் ஏராளம் !

கொஞ்சம் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு ஆன்மீக ஞானமும் விஞ்ஞான பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு

அறிவியல் ஞானமும் கிடைக்கும்.

விஞ்ஞானிகள் சந்திரனுக்கு ஆளனுப்பும்போது மிஹ்ராஜ் நிகழ்வை சிந்தித்ததால்தான் அதன் அடிப்படையில் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பியதாக சொல்லி இருக்கிறார்கள் .

ஈமானிய உணர்வோடு சிந்திக்கும்போது நாம் அல்லாஹ்வின் ஆற்றலையும் நபிகளாரின் மாண்பையும் அறிந்து கொள்ள முடியும் .

பைத்துல் முகத்திசிலிருந்து நபிகளார் பயணத்தைத் தொடங்கினார்கள்.

இதற்கு முன்னால் இந்த மண்ணுக்கு இறைவனின் செய்தியைக் கொண்டு வந்த நபிமார்களுக்கெல்லாம் இமாமாக நின்று நபிகள்

தொழுகை நடத்தினார்கள்.

இறை தரிசனம் முடிந்து ஐம்பது வேளை தொழுகையை இறைவன் கடமையாக்கியதை நமக்காகக் கொண்டு வரும்போது நாலாம் வானத்தில்

மூஸா நபி ( அலை ) அவர்களை சந்தித்தார்கள்.

அப்போது ...

" ஐம்பது வேளைத் தொழுகையை இறைவன் என்  உம்மத்துகளுக்கு கடமையாக்கி இருக்கிறான் " என்பதை  நபிகள் மூஸா நபியிடம் சொன்னார்கள்.

" உங்கள் உம்மத்துகள் இதனைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள் . மீண்டும் இறைவனிடம் சென்று அதை குறைத்து வாருங்கள் " என்று மூஸா நபி சொன்னார்.

அதன்படி பலமுறை இறைவனை சந்தித்து ஐம்பது வேளை தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாக நபிகள் குறைத்துக் கொண்டு வந்தார்கள்.

இங்கே ...

நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது.

மூஸா நபியவர்கள் மரணித்து பல ஆயிரம் வருடங்களாகி விட்டன.

அவரது மண்ணறையும் பூமியில்தான் இருக்கிறது.

அப்படியிருக்க மூஸா நபியிடம் நமது முஹம்மது நபிகள் ( ஸல் ) அவர்கள் எப்படிப் பேசினார்கள் ?

இறந்தவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்று கூறுகிறார்கள் .

அப்படியானால் ...

உலகம் முடிவுநாள் வரை வாழக்கூடிய முஸ்லிம்களுக்கும் ஐம்பது வேளைத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைக்கச் சொல்லி  உதவி செய்தவர் மூஸா நபி அவர்கள்தானே.

இது உதவியில்லையா ?

எப்போதோ இறந்துபோன ஒரு நபி

ஹயாத்தாக இருக்கும் ஒரு நபிக்கும்

அவர்களின் கடைசி உம்மத்துக்கும் ஒரு ஆலோசனையின் வழியாக உதவி செய்திருக்கின்றார் என்பதை நாம் மறுத்து விட முடியாது.

ஆக...

அல்லாஹ் நாடினால் இறந்தவர்களால் உயிரோடிருப்பவர்களுக்கு உதவி செய்ய முடியும்

என்பதை நிரூபிக்கும் அத்தாட்சியாக இந்த மிஹ்ராஜ் நிகழ்வு அமைந்துள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

அத்தனை சிறப்பு மிக்க இந்த புனிதநாளை நாம் கண்ணியப்படுத்துவோம் !

அதன் மாண்புகளை உணர்ந்து அல்லாஹ் நமக்குத் தந்தக் கடமைகளை நிறை வேற்றுவோம்.

இன்ஷா அல்லாஹ்...

No comments:

Post a Comment