Friday, 31 May 2013

ஒரு சொத்து விற்கு முன் மாற்று யோசனை தேவை!


இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணுக்கு தன் சொந்த பணத்தை (சொத்தை) தான் வைத்துக்  கொள்ள உரிமை உண்டு . அவள் பொருளை அவளது கணவன் அவள் அனுமதி இல்லாமல் விற்கவோ எடுத்துக் கொள்ளவோ உரிமை கிடையாது மற்றும் அவள் எந்த உறவு முறைகளுக்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.அது அந்த பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தது
    என் மனைவியிடம்  நகைகள் அவள் போட்டுக்  கொள்ளாமல் வீட்டு அலமாரியில்  முடங்கிக் கிடந்த காரணத்தினால் அதை விற்று ஒரு கட்டிடம்  வாங்கி வாடகைக்கு விட்டால் வருமானம் வருமே என்ற எண்ணத்தில் ஆடிட்டர் யோசனை கேட்டேன். அவர் உடனே 'அந்த நகை உங்கள் சொத்தல்ல அது அந்த பெண்ணைச் சேர்ந்தது' என்றார். நான் 'வாங்கப் போகும் கட்டிடம்  மனைவியின் பெயரிலேயே இருந்து அதனால் கிடைக்கும் வருமானமும் மனைவிக்கே கிடைக்க வழி செய்வேன்' என உறுதி கொடுத்தேன்.பின்பு  ஆடிட்டர் ' நல்லது'   என்றார்.

Thursday, 30 May 2013

உன் சைகையால் உன்னை காட்டிக் கொண்டாய் !


மூக்கை சற்று தேய்கிறாய் உன்னிடமிருந்து வரப்போவது   நிராகரித்தல், சந்தேகம், அல்லது பொய்
நகத்தை கடிக்கிறாய் பாதுகாப்பின்மையும் , பதட்டமும் உன்னிடம் இருப்பதை அறிவேன்
உன் வேகமும் ,நிமிர்ந்த நடையும் தன்னம்பிக்கையை காட்டுகின்றது
இடுப்பில் கை வைத்து  நின்று  விட்டாய் உன் தயார் நிலை தெரிகிறது , யாரிடம் ஆக்கிரமிப்புக்கு ஆயத்தமாகின்றாய்

அமர்ந்த நிலையில் கால்களை உதைத்து சலிப்பை காட்டுகின்றாய்

உனக்கென்ன அமர்ந்தபடி கால்களை அகற்றி வைத்து நிம்மதியான நிலையாக இருக்கிறாய் 
நெஞ்சுக்கு மேல் ஆயுதம்  வைத்து பாதுகாப்புத்தன்மை காட்டுகின்றாய்.நானும் ஆயத்தமாகிவிடுவேன் எனது பாதுகாப்பிற்கு. 

தோள்கள் தொங்க கைகளை கால்சட்டை பையில்   சொருகி வெறுமையை காட்டுகின்றாய்  கன்னத்தில் கை வைத்து திட்டத்திலும் ,சிந்தனையிலும் ஈடுபட்டு விட்டாய்  
கண்ணை தேய்ப்பதால் சந்தேகம், நம்பிக்கையின்மை
கையை  பின்னால் கட்டி நிற்பதால் கோபம், வெறுப்பு, அச்சம் காட்டுகின்றது

உள்ளங்கை மீது கை வைத்து அழுத்தி கைப்பற்ற திட்டமோ
கை மேல் தலை வைத்து கண்களை தாழ்த்தியதால்  சலிப்பின் வெளிப்பாடோ
உரசும் கைகளால்  எதிர்பார்ப்பில் உள்ளாயோ

Tuesday, 28 May 2013

நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம் !

நாம் பெருநாளை சேர்ந்து கொண்டாடுவோம்
`அப்பா ரொம்ப  தொலைவில் வெளிநாட்டில் இருக்காரே நம்ம மேலே அன்பா இருந்து நம்மை நினைத்து பார்ப்பாரா அம்மா`
நிட்சயமாக நம்ம நினைவில்தான் இருப்பார்.
அப்பா இந்த பெருநாளுக்கு ஊருக்கு வரமாட்டாரா அம்மா !
நீ படிக்க பணம் வேணுமே! அதுக்குத்தான் உங்க அப்பா அங்கே தங்கி இருக்காங்க . இன்சாஅல்லாஹ் அடுத்த பெருநாளுக்கு நம்முடன் இருப்பார் . நீ நல்லா பெருநாள் கொண்டாடவேண்டும்  என்றுதான் நினைக்கிறார், அதனால்தான் அவர்  உனக்கு பணம்,சட்டை பாவாடை  எல்லாம் அனுப்பி இருக்கின்றார் .

பிள்ளைகளை, மனைவியை மற்றும் குடும்பத்தாரை பிரிந்து பணத்திற்காக வாழ வேண்டிய கொடுமை . குடும்பத்தாரை பிரிந்து வெளிநாட்டில் இருக்கும் மக்களை  பார்பவர்களுக்கு மகிழ்வாக இருப்பொழுதுபோல்  இருக்கும் ஆனால் அவர்களின் மன வலி அவர்கள்தான் அறிவார்கள்.
.எல்லோருக்கும் எல்லாம் எப்பொழுதும் கிடைத்துவிடுமா !
எங்கிருந்தாலும் குடும்பத்தினை மறக்கமுடியுமா? நினைவைத்தான் பிரிக்கமுடியுமா? குடும்பத்தினை மறந்து வாழ்வில்  மகழ்ச்சி காண முடியுமா‌! குடும்பத்தினை பாதுகாக்க திரைகடல் ஓடியும் திரவியம்  தேட வேண்டிய நிலமை  என்ன செய்வது ! ஒன்றை இழந்தால்தான் மற்றதனை பெறமுடியும்.

Monday, 27 May 2013

இன்பத்தைக் கண்டு துள்ளுவதும் துயரத்தைக் கண்டு துவளுவதும் இல்லாத மனதைத் தா இறைவா!


மற்றப் பெண்களின் கையிலும் மடியிலும் குழந்தையைக் கண்டால் என் மடியிலும் குழந்தையைத் தா இறைவா! என வேண்டாத நாளில்லை. ஆண்டவன் அருள் செய்தான்.பிள்ளை பெற்றேன் அதனால் நான் மலடி என்று என்னை யாரும் சொல்ல மாட்டார்கள் என பெரு மூச்சு விட்டது அடங்கு முன் இறைவன் அக் குழந்தையை மரணமடையச் செய்து தன் பக்கம் அழைத்துக் கொண்டான். அந்த மகிழ்வு நீடிக்காமல் போனதே என ஏங்கினேன். இது எனக்கும் என் உட்றார் உறவினர்களுக்கும் மற்றும் அனைவர்க்கும் மிகவும் மன வருத்தத்தினை தந்தது .
எனது தொழிலில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால் பல இன்னல்களுக்கு உள்ளானேன்.
நான் மிகவும் சோர்ந்து மனமுடைந்து போனபோது ஒருவர் என்னிடம் வருந்தாதே 'அக் குழந்தை சுவனத்தில் இறைவனால் சேர்க்கப் பட்டு விட்டது. "குழிப் பிள்ளை மடியிலே" என்பது போல் இறைவன் உனக்கு தேவையானபடி உனது விருப்பம் போல் குழந்தைகள் கொடுப்பான்' என அன்புடன் ஆறுதல் சொன்னார். அந்த வார்த்தை என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
அல்லாஹ்வின் அருளால் எனக்கு மறுபடியும் நல்ல குழந்தைகள் கொடுத்து மகிழ்வாக வாழ வழி செய்துவிட்டான். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

ஆனால் இடைப்பட்ட காலங்களில் துயரத்தால் நான் இழந்த பல்வகை சிரமங்களும் நானே உருவாக்கிக் கொண்டவையே. நல்லதும் கெட்டதும் நடப்பது இயல்பு அதையே நாமே வரவைத்துக் கொள்வது நற்செயலாக இருக்க முடியாது. அனைத்தையும் சமநோக்கோடு எடுத்துக் கொள்ளும் மனது தேவை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.

Saturday, 25 May 2013

ஊக்கமுடையோர் இடையூறுகளுக்கு அஞ்சிட மாட்டார்கள்.

  நல்ல கருத்தை ,கவிதையை விரும்பி படிக்க நமக்குள் ஒரு பொறி தட்டுகிறது. அது நம்மை உருவாக்குகின்றது .நம்மையும் அதைவிட சிறப்பாக எழுதத் தூண்டுகின்றது. நமக்குள் ஒளிந்துக் கிடப்பதனை நாம் அறியோம் .நம்மை நாமே நாம் அறிந்து விட்டால் நாம் ஞானி

  மற்றவர் நல்ல கருத்துகளை சுயமாக சிந்தித்து சிறப்பாக நயம்பட தருகின்றார்களே நாம் மட்டும் அடுத்தவர் கருத்தை போடுகின்றோமே என்ற வருத்தம் வேண்டாம்.  சொல்லியவர் ,எழுதியவர் ,உரிமையாளர் பெயரையும் சேர்த்து விடுங்கள் .அது இருவருக்கும் அறிவைப் பகிர்ந்த நன்மையை கொடுத்து விடும். காப்புரிமை இப்பொழுது வந்ததுதான்.சங்க இலக்கியங்களுக்கு காப்புரிமை இருந்திருந்தால் தமிழ் மறைந்திருக்கும்.

Friday, 24 May 2013

எங்கே நிம்மதி நிலையற்ற மின்சாரத்தால்!

மனிதன் வாழ்வில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
இறக்கம் காண இரக்கம் கொண்டேன்

மின்சாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்டேன்
மின்சாரத்தின் மீது வெறுப்பைக் கொண்டேன்

எங்கே நிம்மதி நிலையற்ற மின்சாரத்தால்
நெட்டே  கழண்டு போச்சு பிடியற்ற கரண்டால்

மின்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையற்றதாய் போகக் கண்டேன்
சம்சாரம் பாய்ச்சும் மின்சாரம் முறையாக இருக்கக் கண்டேன்

மின்சாரம் வேண்டாம் சம்சாரம் போதும்
சம்சாரம்தான் சமாசாரத்திற்கு சரிபட்டு வரும் 

Thursday, 23 May 2013

அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு

"தாயின் காலடியில் சுவனம் இருக்கிறது" நபிமொழி

 என் செல்லமே!உன் தாயின் முகத்தைப் பார். நரைத்த முடி, சோர்வான முகம்,தளர்ந்த உடல், முதுமையின் தாக்கம்!
மகன் தன்னிடம் அன்பாக பேச மாட்டானா என்ற ஏக்கம் - உன் தாயின் விழிகளில் தெரிவதைப் பார் மகனே!
என் செல்லமே! இப்பொழுதே உன் தாயிடம் உன்பாசத்தைக் காட்டு, பரிவைக் காட்டு,கனிவு காட்டு, அன்பாகப் பேசு,இறையருள் பெற்றிடு, இறைப் பொருத்தத்தை பெற்றிடு மகனே!

அன்னையிடம் உன் பாசத்தைக் காட்டு பரிவைக் காட்டு.நான் நிரந்தரமாகக் கண்கள மூடிய பின் நீ என்ன கதறினாலும் நான் எழுந்து வர முடியாது! இருக்கும்போது எப்பொழுதும் அருமை தெரியாது. மறைந்த பின் கதறி என்ன பயன்?ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர் மீண்டு வரமாட்டார். அந்த நிலை உனக்கு வேண்டாம் மகனே!

Wednesday, 22 May 2013

முயல்வது நம் கையில். முடிவு இறைவன் நாடியது

 (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம் - .குர்ஆன்-1:5


முயல்வது நம் கையில். முடிவு இறைவன் நாடியது . நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் இறைவனின் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வந்து விடுவோம். ஆண்டவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் இறைவன் வசம் உள்ளது . முயற்சி செய். முடிவை ஆண்டவன் வசம் விட்டு விடு. நாம் தேவை இல்லாமல் படைக்கப் படவில்லை. நாம் நம் கடமையினை   செய்தே ஆக வேண்டும் .செய்யத் தவறினால் 'உனக்கு இத்தனை ஆற்றல் கொடுத்தேனே ஏன் அதனை பயன் படுத்தாமல் விட்டு விட்டாய்' என்ற கேள்விக்கு நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

 நம் தாய் மர்யம்(ஸ.ல்) அவர்கள் ஈஸா நபியினை  ஈன்றடுத்தபோது பசி வந்து இறைவன் அருள் நாட நீ அந்த பேரித்தம் மரத்தினை குலுக்கு பழம் கொட்டும் அதனை எடுத்து உன் பசியினை ஆற்றிக்கொள் என இறைவன் சொன்னான். இறைவன் நினைத்தால் பசி இல்லாமலோ அல்லது பழம் தந்தோ பசியைபோக்க உதவியிருக்கலாம்.

 "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.

-குர்ஆன் -19 : 25


 இறைவன் ' என்னிடம் நாடு அதே சமயம் உனது முயற்சியையும் மேற்கொள்' என்று நினைவுபடுத்துகின்றான். இதுதான் நாம் கடைபிடிக்க வேண்டியது.

 செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.

Tuesday, 21 May 2013

உங்கள் சரிதம் சொல்லுங்களேன்.

நிறைய மரங்கள் ஆனால் அனைத்திலும்   பழமில்லை
நிறைய பழங்கள் ஆனால் அனைத்தும் உண்பதற்கு உகந்ததில்லை
நிறைய மனிதர்கள் ஆனால் அனைவரும் அறிவு பெற்றிருக்கவில்லை
நிறைய அறிவு பெற்ற மனிதர்கள் ஆனால் அவர்கள் அறிவு அடுத்தவர்களுக்கு பயனளிப்பதில்லை
உண்ண உகந்த பழம் ,உயர்ந்த பகிர்ந்தளிக்கப்பட்ட அறிவு உயர்ந்தது

நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
- குர்ஆன் -3:190.

உங்கள் சரிதம் சொல்லுங்களேன் . எங்கு, எதுவரை, எதில் ஆர்வம் கவிதை எழுத உந்தப்பட்டது . இவையெல்லாம் சுய விளம்பரமோ, சுய விமர்சனமோ, சுயசரிதை என்று தயக்கம் வேண்டாம் .சொல்வதை அழகுபட சொல்வதில் உங்களுக்கும் மகிழ்வு. அடுத்தவருக்கும் ஒரு தூண்டுதல் .உங்கள் அறிவு பரவலாக்கப் படவேண்டும் . நீங்கள் ஒரு சிறந்த மார்க்கப்பற்றுள்ள குணம்முள்ள எழுத்தாளர்,கவிஞர் ,அனைத்துக்கும் மேல் அனைவராலும் நேசிக்கப் படுபவர் .இறைவன் கொடுத்த அறிவை பகிர்ந்திடுங்கள் .'உங்களில் 'உயர்ந்தோர் தான் பெற்ற அறிவை மற்றவருக்கு ஏற்றி வைப்பவரே' - நபிமொழி

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)."
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். புகாரி ஹதீஸ்


Monday, 20 May 2013

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்

நண்பர்கள் பலர் இருக்க மகிழ்வு
இறப்பு அழைக்க இரு வரிகள் எழுதுவார்கள்
கவிஞர்கள் நிறைய நண்பர்களாக இருக்கிறார்கள்
கவிஞர்களை நண்பர்களாக பெற்றது பெருமையாக இருக்கிறது
என்னைப் பற்றி கவிபாட ஒன்றுமே என்னிடமில்லை
கவிஞர்கள் மீது நான் கொண்டுள்ள பாசம் ,ஈர்ப்பு அளவிடமுடியாதது
'கவிதை' என்று எனக்கு எழுதத் தெரியும் ,கவிதை மீது ஈர்ப்பு ஆனால் கவிதை எழுதத் தெரியாது.
இறந்து விட்டால் நம்மைபற்றி நல்ல வார்த்தைகள் மக்கள் சொன்னால். நமக்காக இறைவனிடத்தில் வேண்டினால் அதுவே இந்த உலகில் நாம் பெற்றதில் உயர்வானது
இருக்கும்போது ,தட்டுங்கள் ,திருத்துங்கள் ,வழிகாட்டுங்கள் இறந்த பின் குறையாக யாரையும் சொல்லிவிடாதீர்கள் .இதுதான் இஸ்லாத்தின் வழிமுறை.

ஒருவர் உயிரோடு இருக்கும்வரை நல்லது கெட்டது எது செய்தாலும் அதை விமர்சனம் செய்வதும் குறைகளை சுட்டிக்க்காட்டுவதும் தவறில்லை. ஆனால் ஒருவர் மரணித்து விட்டால் அவரைப்பற்றி குறைகூறுவதை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

இறந்தவர்களை திட்டாதீர்கள்: ஏனெனில் அவர்கள் என்னென்ன செய்தார்களோ அதன் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) நூல்: அஹ்மத், புகாரி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நல்ல காலம் வந்தாச்சு

பலர்  வோட்டு போட சிலர் காசு பண்ண
சிலர் நோட்டு சேர்க்க  பலர் வாடி வதங்க

நல்லவை வர அல்லவை போக
கெட்டவை வர நல்லவை போக

மகிழ்வு  வர  துயரம் போக
துயரம் வர  மகிழ்வு போக

சிலர் பாசம் காட்ட  சிலர் நேசம் காட்ட
சிலர் கோபம் காட்ட சிலர் வேசம் காட்ட

நல்ல காரியத்திற்காக பொய் சொல்வது தவறில்லை

நடந்தது உண்மை .
எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல . நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான
மருத்துவர்  Dr.Ramathilagam M.D.,. D.M.,Gastroenterologist 
வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர்  உள்ளார் அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்' என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார். நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்தித்தோம். நண்பர் தான் முதலில் காட்டிய மருத்துவரின் ஆலோசனைக் குறிப்புகளும்  மற்றும் அந்த வியாதிக்கு தேவையான மருத்துவ டெஸ்டுகளும் மற்றும்  எக்ஸ்ரே போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். ஆனால் அவருக்கு என்ன வியாதி உள்ளது என்று  அந்த மருத்துவர் நண்பரிடம் சொல்லாமல் மருந்துகள் மட்டும்  எழுதி கொடுத்திருந்தார். அவருக்கு வந்துள்ள வியாதியை  .உண்மையிலேயே அவரது குடும்பத்தார் எனது நண்பருக்கும் தெரியாமல் வைத்துவிட்டனர்.நானும் அதனைப் பற்றி அறியாத நிலை.

 மருத்துவரிடம் நாங்கள் ஆலோசனைக் கேட்க அதற்கு தேவையான மருத்துவ விபரங்களைக் காட்டினோம்.  மருத்துவர் அனைத்தையும் பார்த்த பின்பு எனது நண்பரை சில நேரங்கள் வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

Sunday, 19 May 2013

"தமிழ் இனி" - குறும்படம் இணைப்புடன்

வெளிநாடு வாழும் தமிழ் குடும்பங்கள் அதிலும் குறிப்பாக அங்கில மொழி பேசும் நாடுகளில் தங்களது குடும்பத்திற்குள் ஆங்கில மொழியையே பேசுகின்றனர் .அதனால் அவர்களின் வாரிசுகள் தமிழ் மொழியை அறியாமல் போகும் பரிதாப நிலை. ஆங்கில மொழியை பயிற்று மொழியாக உள்ள பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டுமென்ற கட்டாயப்படுத்துகின்றனர்.அதனால் தமிழ்நாட்டில் நகரங்களில் வாழும் படித்த குடும்பங்கள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர்.இந்நிலை தொடருமானால் 'தமிழ் இனி மெல்லச் சாகும்' நிலை வருமோ! என்று மக்கள் மனத்தில்  நினைக்கச் செய்கின்றது
குறும்படங்கள் உள்ளத்தில் நிறைவைத் தந்து மனதில் பதிந்துவிடுகின்றன
குறைந்த மணித்துளிகளில்  சொல்லிவிடும் குறும்படங்களின் கருத்துகள் விறுவிறுப்பானவையாக அமைந்துவிடுகின்றது. குறும்படங்கள் காட்சிகள் சிறப்பாக தரப்பட்டுகின்றது

நோக்கம் உயர்வானதாக இருக்க வேண்டும்


 சிலர் கற்பனையாக ஒரு கருவை வைத்து நிறைவான நல்ல கட்டுரையும், உயர்ந்த கவிதையும் தருவார்கள். இதுவும் தொடரும் காலத்தில் ஒளி வீசுகின்றது
சேவை செய்தவர்களின் உண்மை நிகழ்வுகள் சிறிதும் கலப்படமற்று சிறப்பானதாக தரப்பட்டது சரித்திரமாகி விடுகிறது.
நமக்காக எழுதி வைத்த தினக் குறிப்புகளும் , நிகழ்வுகளும் நமது குடும்பத்திற்கு நன்மையை தரக் கூடியதாக அமையலாம் . அந்த குறிப்பில் நமது உறவு முறைகள் காணப்பட்டிருந்தால் வருங்கால பரம்பரைகள் நமது உறவுகளை அறிய வைக்கின்றது .உறவை நாடுபவர்களுக்கு இது பயன்படும்.

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
(புகாரி ஹதீஸ்-1)

Saturday, 18 May 2013

மனைவி விரும்ப சோகத்தை விழுங்கு மனைவி கொடுத்த உணவை விழுங்குவது போல


சமையலில் கெட்டிக்காரர் யார் ஆணா! பெண்ணா! இம்மாதிரி ஆராய்ச்சி வேண்டாம். பெண்கள் ஒரு புரியாத புதிர்! புதிருக்குள் தலையை விட்டபின் ஆண்கள் தங்கள் உடலையும் உள்ளதையும் பாது காக்க  காலமெல்லாம் போராட வேண்டியதுதான்.
மனைவி சமைக்கும் உணவு சமயத்தில் நன்றாக இல்லையென்றாலும் அதனை சொல்லக் கூடாது. பெண்கள்  புதுமையான சமைக்க கற்றுக் கொள்ள முயற்சித்தாலும் அதற்கு நாம்தான் ருசி பார்த்து சொல்லவேண்டும். அவர்கள் சமைத்த உணவு அவர்களுக்கு அருமை . ஆனால் எப்படி இருந்தாலும் 'அருமையாக இருக்கிறது' என்றுதான் சொல்ல வேண்டும். 'நன்றாக இல்லை' என்று சொன்னால் அடுத்த சமையல் ஆராய்ச்சி நடக்காது. நாம் வாங்கிக் கொடுத்த சமைக்கும் கலை புத்தகம் ஒதுக்கப்பட்டுவிடும் மற்றும் அது சம்பந்தமாக எந்த தொலைகாட்சி நிகழ்ச்சியையும் பார்க்கமாட்டார்கள். அவர்களுக்கு வந்த சமையல் கலை அவர்கள் அம்மா வீட்டில் கற்று வந்தது.நாம் உண்டு பழகியது. நம் அம்மா கொடுத்த பாச உணவு. அதனால் அது எப்படி இருந்தாலும் நமக்கு நன்றாகவே இருந்திருக்கும்.
அவர்களுக்கு சமையல் கலை பற்றி ஆராய்ச்சி செய்ய மாட்டார்கள். முருங்கக்காய் போட்டு சாம்பார் செய்வார்கள் கறி குழம்புக்கு  முறுங்கக்காய் போடச் சொன்னால் இது என்ன புதுமை நன்றாக இருக்காது என்று சொல்லி விடுவார்கள். ஆண்களுக்கு எல்லாவற்றிலும் புதுமை தேவை. அதில் உணவும் விதிவிலக்கல்ல.

Friday, 17 May 2013

உர் உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) .

 உர் உலகிலேயே சரித்திரம் முக்கியம் வாய்ந்த ஊர்(நகரம்) .

நீங்கள் ஒரு மார்க்கத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களா என்பது உங்கள் தனிப்பட்ட கொள்கையைப் பொருத்தது .ஆனால் மார்க்கம் வாழ்கையின் முக்கிய முடிவை தீர்மானிக்கக் கூடியது என்பது உண்மை . ஒரு முக்கியம் வாய்ந்த நகரம் இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் மற்றும் இஸ்ராலியர்களுக்கும் (யகூதியர்களுக்கும்) முக்கியம் வாய்ந்தது. அந்த நகரம் எது? அதனை அனைவரும் அறிந்துக் கொள்வது சிறப்பு.

 நசிரியாவிற்கு அருகில் உள்ளது உர்.   பாக்தாத்திற்கு தெற்கில்  365 km   தூரத்தில் உள்ள உர் மிகவும் புகழ்பெற்ற சரித்திர முக்கியத்துவமாக உள்ளது உலகம் உள்ளவரை அதன் புகழ் மங்காது மற்றும் மறையாது. அதற்கு முக்கிய காரணம் இப்ராஹீம்( Abraham )நபி பிறந்து வளர்ந்த ஊராய் இருப்பதால்.  இப்ராஹீம்( Abraham )நபி . பிறந்தது 1996 B.C.

சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் உள்ள உர் என்ற ஊரில் இப்ராஹீம் நபி பிறந்தார்.

வர்த்தகத்துக்கும் தொழிலுக்கும் மையமாக அந்நகரம் திகழ்ந்தது

 இப்ராஹீம்( Abraham )நபி அன்புள்ளம் கொண்டவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், கலப்பற்ற நம்பிக்கை கொண்டவராகவும் திகழ்ந்தார்.அவர் சிறுவராக இருக்கும் பொழுதே அல்லாஹ் அவருக்கு அறிவு ஞானத்தை வழங்கி இருந்தான்.

 இப்ராஹீம் நபியின் தந்தை ஆஜர் கூட சிலை வணக்கத்தை நம்புவராக இருந்தார். இப்ராஹீம் தனது தந்தையிடம், 'ஏன் நீங்கள் ஏதும் பேசாத பொருட்களை வணங்குகிறீர்கள்?' என்று கேட்ட போது, ஆஜர் மிகவும் கோபப்பட்டார்.

அவரது ஊர் மக்களும் இப்ராஹீம் நபி தனது ஓரிறை கொள்கையின் மீது முழு நம்பிக்கை கொண்டவராய்  அவர்கள் தனது பிறந்த ஊரை விட்டு பிரயாணத்தை தொடங்கினார்

 இப்ராஹீம் நபியின் பிரயாணம்
/>---------------------------------------------------------------------------------

உன்னுடன் வருவது யார் ?

பிறப்பு உறுதி இல்லை. இறப்பு உறுதி. இறப்பு இறுதியாவதுமில்லை

இறப்புதான் பிறப்பின் தொடக்கம். வாழ்ந்த வாழ்வின் பதிவேட்டுகளின்  பிரதிபலிப்பு இடமாற்றமான புதிய இடத்தின் பிறப்பில் உரிய பலனைத் தரும்.

மரணம் என்று ஒன்று உண்டு என நாம் அறிந்தும் அதனை மறந்து செயல்படுகின்றோம்.

மரணம் வரும்போது மரணத்தின் பயம் வருகின்றது .அது இந்த அனுபவித்த வாழ்வு நம்மை விட்டு அகலுகின்றதே என்பதனால். மரணம் ஒரு முடிவாகி விடாமல் அது  புதிய இடத்தில்  பிறந்து பயணம் தொடர்கின்றது என்ற நம்பிக்கை வருவதில்லை.அந்த நம்பிக்கை வரும்போது கிடைத்த இந்த வாழ்வை பிறக்கப் போகும் இடத்திற்கு தகுந்தது போல் இந்த வாழ்வை முறைப் படுத்திக் கொள்வோம். இதுவே இறுதியென்று நினைக்க மாட்டோம் .

   இறுதி  வரை என்ற வார்த்தை பல காரணங்களுக்காக பயன்படுத்தப் பட்டாலும் இறப்புதான் இறுதி என்று நாம் எண்ணுகின்றோம். இதய‌ம் துடி‌க்கவில்லை, செ‌ல்க‌ளி‌ன் இய‌க்க‌ம் ‌நி‌ன்று போனது ‌‌அதனால் மரண‌‌ம். அந்த இறப்பும்,மரணமும் இறுதி இல்லை என நம்புவதும் உண்டு. மறுலோகம் என்பர் மார்க்கம் பேசுபவர் .அதை நம்பாதவர் இயற்கை என்பர் .

மடிதல் என்று கிடையாது உரு மாறுகின்றது. இலை விழுந்தால் எரு. 

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 21:35

 உன்னுடன் வருவது யார் ?


மனிதன் இறந்து விட்டால், அவனது செயல்களும், அதற்குறிய நன்மைகளும் நின்று விடுகின்றன. இருப்பினும் மூன்றைத்தவிர என்று நபி(ஸல்) கூறினார்கள். 

    1.நிலையான தர்மம், 2.பயனுள்ள கல்வி, 3.இவருக்காக இவரது ஸாலிஹான பிள்ளை செய்யும் துஆ. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: முஸ்லிம்

Wednesday, 15 May 2013

இங்கு வந்து பாருங்க! உங்க மகள் அதிகமா பேசுவதை !


இங்கு வந்து பாருங்க! உங்க மகள் அதிகமா பேசுவதை !

நான் என்ன தப்பா பேசுறேன்!

ஆமாம் பெரிய படிப்பை படிக்காமலேயே இப்படி பேசுகின்றாயே!
பெரிய படிப்பை படித்தால் எப்படி பேசுவாயோ!

மேல் படிப்பை படிக்காமே என் படிப்பை கெடுத்தது மட்டுமல்லாமல் என்னை   குத்திக் காட்டுவதில் இன்னும் உனக்கு பெருமை

அதிகமா படிச்சா கெட்டு அலைய வேண்டியதுதான். வீட்டு வேலையே தெரியாது அப்புறம் வேலைக்கு போவேன்னு பிடிவாதம் பிடிப்பே!
 பின்பு உன்னைவிட அதிகம் படிச்ச மாப்பிள்ளை வேனும்பே!

நீ படிசிருந்தாதானே உனக்கு படிப்பின் அருமை தெரியும்.

உன்னிடம்  நான் பேச முடியாது இப்ப. எனக்கு நிறைய வேலை இருக்கு.

தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் விவாதம் இறுதியில் படிப்பை பற்றி திரும்புகின்றது

Monday, 13 May 2013

சமைக்க தெரியாது. ஆனால் சமைத்ததனை சுவைக்க தெரியும்.

இனாம் அல்லது  தர்மம் ஒரு நன்மையான செயல்.

இனாம் பெறுவது விரும்பத் தகாத செயல்

இனாம் கொடுப்பது உயர்த்த செயல்

(ஒளவையார் ஐயமிட்டு உன் என்றும் சொல்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்கிறார்.)

இனாமும் அன்பளிப்பதும் ஒன்றாகாது .

இனாம் கொடுப்பவரும் அன்பளிப்பு கொடுப்பவரும் விரும்பி செயல்படும் முறை. இரண்டும் மகிழ்வைத் தரும்.

இனாம் வாங்குபவர் தாழ்ந்த நிலையில் உள்ளவர் . தாழ்ந்த நிலையில் உள்ளவரும் இனாம் கொடுக்கும் மனம் படைத்தவராகவும் ,இறக்கம்  உள்ளவராகவும் இருக்கலாம் .

இப்பொழுது உள்ள நிலை இனாமுக்கு ஆதாயம் தேடும் நிலைக்கு மாறிவிட்டது .

Sunday, 12 May 2013

‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியும்’


அப்பாவின் கண்டிப்பும் அம்மாவின் ஆறுதலும்!
 தந்தை பணம் செலவழித்து என்னை ‘பெரிய, படிப்பு வைத்தார், படிக்கும்போது அவர் என்னை மிகவும் கவனமாக கண்காணித்து வந்தார். எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் அவருக்கு மனதிருப்தி அடையாது. ‘இன்னும் நன்றாக படித்திருந்தால் அதிகமாக மார்க் வாங்கி இருக்கலாமே’ என கண்டிப்பார். அத்துடன் மற்றவர்களை ஒப்பிட்டும் பேசுவார். உடனே அம்மா வந்து ‘ஏங்க இப்படி அவனை குறை சொல்லிக்கொண்டே இருக்கீங்க’ என்று சொலும்போதுஎன் மனம் அமைதியடைய ஆரம்பிப்பதற்குள் அடுத்த வார்த்தை தந்தை அம்மாவைப் பார்த்து கோபமாக ‘உனக்கு என்ன தெரியும் நீ படிதிருந்தால்தானே’ என்பதுடன் ‘ நான்ல வாங்கிய சம்பளத்தில் பாதி பணத்தை அவன் படிப்புக்கு வாரி கொட்றேன். முட்டையிட்ட கோழிக்குதானே அதன் சிரமம் தெரியும்’ என்பார் அம்மா. ‘நான் தானே பெற்றேன் அதன் வலி எனக்குத்தானே தெரியுமென்று’ முனுமுனுத்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றுவிட என் மனது மிகவும் வருத்தமாகி கண்களிலிருந்து நீர் சுரக்கும். படிப்பையே நிறுத்தி விட்டு என்கேயாவது போய்விடலாம் என்று நினைக்கும். அம்மாவை விடுத்துப் போகக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடர்ந்து படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று படிப்பை முடித்தேன்.

Saturday, 11 May 2013

Status போடுமுன் நமக்கு காட்சி தருவது what's on your mind?

 மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல விருப்பம், நினைத்ததை சொன்னால் மனம் அமைதி அடையும். சொல்வது தொல்லையும் தரலாம் .சொல்லவேண்டியதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாமல் விட்டாலும் பாதிப்பு வரலாம்.
மனதின் வெளிப்பாடு ஒளிமயமாக வர வேண்டும். அலைபாயும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

Status போடுமுன் நமக்கு காட்சி தருவது what's on your mind?
மனதில் உள்ளது ஒன்று! இங்கே போடுவது வேறு.
மனதில் உள்ளதை, தான் செயல்படுத்த நினைத்ததனை இங்கே போடுவோர் எத்தனை பேர்?

 காப்பி அடித்து எழுதும்போது நம்மை அறியாமல் காப்பி அடித்த பகுதியில் சில கருத்துகள் நம் மனதில் நின்று நமது அறிவை வளர்க்கும் வாய்பும் உண்டாகிறது .அதுபோல ஃபேஸ்புக்கில் மவுசை உருட்ட சில நல்ல படங்களும் ,அறிவான செய்திகளையும் நம் அறிவு உள்வாங்கிக் கொள்கின்றது .அது மனதில் உருண்டுக் கொண்டே இருந்து இரவில் கனவில் காட்சியாக பரிணமித்து புதிய மாற்றமான கருவாகி உருவைத் தர உதவுகின்றது .
தீமையாய், தீண்டத் தகாததாய் நினைக்க அதுவே உறுத்திக் கொண்டு தொல்லை தரும்
எதில் ஈடுபட்டாலும் மகிழ்வு இருக்க வேண்டும்.

  தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது தொழிலைப் பற்றிய நினைவு. அந்த இடத்தை விட்டு அகன்ற பின் இருக்குமிடத்தைப் பற்றிய கவனம். இங்கு இருந்துக் கொண்டு அதை நினைப்பது அங்கு இருந்துக் கொண்டு இதனை நினைப்பது இரண்டிலும் இழப்பைத் தரலாம் . ஓய்வை நாடி. மாற்றம் நாடி வெளிநாடு சுற்றுலா சென்றேன். சென்ற இடங்களை முழுமையாக மன நிறைவோடு பார்த்து வந்தேன். பின்பு ஓர் உத்வேகம் .

Friday, 10 May 2013

அனைத்தும் நன்மையாய் அமைந்தது!

நான் கேட்டதை அவன் கொடுக்கவில்லை
நான் கேட்காததை அவன்  கொடுத்தான்
அவன் கொடுக்காததும் நன்மையாய் போனது
அவன் கொடுத்ததும் நன்மையாய் போனது

நான் வலிமை கேட்டேன் .........
இறைவன்  எனக்கு சிரமங்களை கொடுத்து   என்னை வலுவாக்கி   அதனை சமாளிக்க வழி செய்தான்.
நான் அறிவு  கேட்டேன் .........
இறைவன் எனக்கு பல சிக்கல்கள் கொடுத்து அதனைத்  தீர்க்க முறை செய்தான்.
இறைவனிடம்  வளமாக  வாழ பொருளும் பணமும் கேட்டேன் .........
இறைவன் திறமை கொடுத்து வேண்டியதை தேடும் ஆற்றல் கொடுத்தான்..
ஆண்டவனிடம்  தைரியமாக வாழ வழி கேட்டேன் .........
ஆனால் அல்லாஹ் எனக்கு ஆபத்து கொடுத்து அதனை சமாளிக்க அறிவைக் கொடுத்தான்.

Thursday, 9 May 2013

கல்வி பெறுவது தன்னை தெரிவதற்கு தன்னை அழிப்பதற்கு அல்ல.

தற்கொலை செய்பவர் தற்குறி.
கல்வி பெறுவது தன்னை தெரிவதற்கு தன்னை அழிப்பதற்கு அல்ல.
கல்வி கற்பது மற்றவரை மதிப்பதற்கு மற்றவரை வருத்துவதற்கு அல்ல .
பாடசாலை சென்று படிப்பது பகுத்தறிவைப் பெறுவதற்கு பரதேசி ஆவதற்கு அல்ல
பாடசாலை தரும் சான்ரிதழ் வாழ்க்கையில் தகுதி பெற்றதற்காக அல்ல
கல்விக்கு கொடுக்கும் மதிப்பெண் அடுத்த அடி வைத்து நகர அது தன்னை அழித்துக் கொள்வதற்கு அல்ல .
----------------------------------------
கல்லூரியில் படிக்கும்போது சில கேள்விகளை ,பாடங்களை தேர்வுக்கு வரக் கூடியது என முக்கியப் படுத்தி சொல்வார்கள். தேர்வுக்காக படிக்கும் மாணவர்கள் அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள் .அவர்கள் படித்தது ஏதும் தேர்வில் கேட்டிருக்க மாட்டார்கள். தேர்வு எழுதியதில் திணறல். அதனால் மதிபெண்கள் குறைந்துவிடுகிறது . படித்தது தேர்வில் விடை எழுதத்தான் என்ற நிலையாகி கற்பதின் அடிப்படை கொள்கையே அடிபட்டுப் போகும் நிலை உருவாகிறது.

அறிவு ,ஞானம், திறமை மற்றவை அனைத்தும் அறிந்து ,தெரிந்து. திறிந்து அடிபட்டு அனுபவப்பட்டு வருவதில்தான் சிறப்பாக அமையும்.
-----------------------------------------

பெயர் வைத்த காரணம்!


காயிதே ஆஸம் முகமதலி ஜின்னா அவர்களின் மீது கொண்டிருந்த மட்டற்ற மதிப்பும் மரியாதையை நிலைப்படுத்த 1938ல் நான் பிறந்ததும் எனக்கு முஹமதலி ஜின்னா என்று பெயர் சூட்டினார்கள். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக "முஹமதலி ஜின்னா" என்று பெயர் சூட்டப்பட்டது எனக்குத்தான்.எங்கள் வீட்டு தெரு பெயர் ஜின்னாத் தெரு .அதில் முதல் வீடு எனது வீடு ,எனது வீட்டுக்கு நேர் எதிரில்

<பள்ளிவாசல் உண்டு .

 தெற்கு பார்த்த  வீடுகள் முதல் ஐந்தும் எனது உடன் பிறந்தோர் வீடுகள்Tuesday, 7 May 2013

பாங்கோடு உள்ளம் நிறைய சொன்னாள்!

மனம் திறந்து சொல்கிறேன்

கனத்த மனதோடு சொல்கிறேன்

உருப்படியாய் ஒன்றும் செய்யவில்லை

படிப்படியாய் உருவாக்கிய பெற்றோர்

படிப்படியென கதறிக் கற்பித்த ஆசிரியர்

உருப்படியாய் உள்ளத்தில் உறைய முயன்றனர்

கற்றுத்தந்தது உள்ளத்தில் உறையவில்லை

கற்பித்தோர் வளர்த்தோர் கண்டிப்பைக் காட்டினர்

வளர்த்தோர் உருப்படியாக ஒன்று செய்தனர்
வளர்த்தோர் வாரிசு தொடர கண்டித்து கட்டி வைத்தனர்

கல்யாணக் கட்டு போட்டால்தான் கரையேருவான்!
கல்யாணத்திலும் கண்டிப்பைக் காட்டினர்

வளர்த்தோர் தேடி முடித்து வைத்தவள்
எங்கிருந்தோ வந்தாள் வந்தவள் புதிது

பாங்கோடு உள்ளம் நிறைய சொன்னாள்
சொன்னவள் சொல்லியது உள்ளத்தில் உறைந்துவிட்டது.

கற்பித்தோர் வளர்த்தோர் காட்டிய கண்டிப்பு பயன்தரவில்லை
வந்தவள் காட்டிய பாசம் கரை சேர்த்தது

Monday, 6 May 2013

உங்களை அறிய மற்றவர்களை அறிந்துக் கொள்ளுங்கள்

 நான் இஸ்லாம் வழியை விரும்பியும் அறிந்தும்  பின்பற்றுபவன் .நான் பேஸ் புக்கில் நல்ல நண்பர்களைப்  பெற்றுள்ளேன் நான் அனைவரையும் நேசிக்க மற்றும்  யார் விரும்பினாலும் தடையில்லாமல் நண்பர்களாக  ஏற்றுக் கொள்ள விரும்பினாலும் ஏற்றுக் கொள்கின்றேன்  இந்தியாவில்தான் மக்களுக்குள் மதப் போர்வையில் பிரிந்து நிற்கின்றனர் அதில் தமிழ்  நாடும் விதிவிலக்கல்ல. இது மிகவும் வருந்த வேண்டிய செய்தி.எத்தனை மதங்கள் ஜாதிகள் அவர்களுக்குள் போராட்டங்கள்!

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
-குரான் 109:6.

ஒரு நபித்தோழராகிய சஹாபி நாயகத் திருமேனியை நோக்கி, ‘நம் இனத்தின் மீது பற்றுக் கொள்வது, அதிலும் தீவிரமான பற்றுக் கொள்வது தவறா?’ என வினாத் தொடுத்தார். இவ்வினாவுக்கு விடை கூற வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ‘ஒருவர் தன் இனத்தின்மீது பற்றுக்கொள்வது இயற்கை. அது பற்றாக மட்டுமே வளர்ந்து வளமடைய வேண்டுமேயல்லாது, வெறியாக மாறிவிடக் கூடாது’ என்றார்கள்.

 உங்கள் மார்க்கம் உங்களுக்கு உயர்வாக இருக்கலாம்.என் மார்க்கம் எனக்கு உயர்ந்தது. நேசிப்பதற்கும் கருத்து வேறுபாடுகளுக்கும்  நட்பில் எந்த காலத்திலும் மோதல் வரக்கூடாது . நாம் பெரியார் ,அண்ணா ,நேரு மற்றும் பலர்  கொண்டிருந்த கொள்கை நம்மிடமிருந்து மாறு பட்டிருந்தாலும் அவர்களது   உயரிய எழுத்துக்களை கருத்துகளை    விரும்பி  படிக்கின்றோம்.அதில் நமக்கு கட்டாயம் உடன்பாடு இருக்க வேண்டும்   என்ற அவசியமில்லை.

Saturday, 4 May 2013

நியாயம் வழங்குவதில் இனவாதம் மறுக்கப்படவேண்டும்

 பாலைவனத்தில் முகம்மது நபி (ஸ.அ) அவர்களோடு நபித் தொழர்ளும் பிரயாணம் செய்துக் கொடிருந்தார்கள்.பாலைவனத்தின் வெயிலின் கொடுமை அவர்களுக்கு தாகத்தை அதிகமாக்கியது.வைத்திருந்த குடி நீர் பற்றாக்குறை. போகும் வழியில் நீர் தேக்கத்தினை கண்ட தோழர்கள் வேகமாக அந்நீரை நோக்கி ஓடினார்கள்.போகும் வேகத்தில் மக்காவாசித்(முஹாஜிரின்) தோழரின் காலை மதீனாவாசி (அன்சாரி)தவறுதலாக மிதித்து விட்டார் .அதில் கோபமடைந்த மக்காவாசி(முஹாஜிரின்)மதீனாவாசியை  (அன்சாரி) அடித்துவிட்டார். உடனே அந்த அன்சாரித் தோழர் கோபமாக அடைக்கலமாக வந்த உங்களுக்கு 'நாங்கள் வீடும் உணவும் கொடுத்து உபசரித்தோம் அதனைக் கூட நினைத்துப் பார்க்காமல் அடித்து விட்டாயே' என்று சொல்லியதோடு மக்காவாசி(முஹாஜிரின்) அடித்து விட்டார் வாருங்கள் மதீனாவாசிகளே  (அன்சாரி)வந்து பாதுகாப்பு கொடுங்கள் என கூவி தங்களைச் சேர்ந்தவர்களை அழைக்க அந்த இடத்திற்கு மதீனாவாசிகள்  (அன்சாரிகள்)ஓடி வர இதைக் கண்டு பயந்த மக்காவாசி(முஹாஜிரின்) தங்களது மக்காவாசி(முஹாஜிரின்) மக்களை அழைத்தார் . பெரிய கூட்டமாக இருவருக்கும் ஆதரவாக கூட்டம் கூடி ஒரு பெரிய கலவரம் நடக்கும் அளவுக்கு போய் விட்டது. இது முகம்மது நபி (ஸ.அ) அவர்கள் அறிய வர அவர்கள் அவர்களிடம் மிகவும் கோபமாக சொன்னார்கள் . தவறு செய்திருந்தால் தவறின் அடிப்படையில் தண்டனை கொடுங்கள் அதைவிடுத்து இன மற்ற இடத்தினைச் சார்ந்தவர் என்பதனை வைத்து குறுகிய நோக்கம் கொண்டு செயல்படாதீர்கள் என்று எச்சரித்தார்கள்.
 --------

'கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவனல்ல.அரபியனைவிட அரபியரல்லாதவனோ, அரபியரல்லாதவனைவிட அரபியனோ சிறந்தவனல்ல.உங்களில் இறையச்சமுடையவர்களே இறைவனிடத்தில் மேன்மையானவர்கள்'.-நபிமொழி

Friday, 3 May 2013

பேரழிவு ஆயுதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்?

பேரழிவு ஆயுதங்களை  ஆரம்பித்து  வைத்தவர் யார்?

இஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை
கி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .
முஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.
ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800 ரில் அபு மூஸா ஜாபிர் இப்ன் ஹய்யான் (Geber) கண்டுபிடித்தார்
ஜாபிர் இப்னு அல் ஹய்யான் இஸ்லாமிய விஞ்ஞானி ஆனால் ஆங்கிலேயர் முஸ்லிம் என்று அறியாதவாறு அவரை geber ஜெபர் என்று அறிவிக்கின்றனர்
ஜாபிர் இப்னு அல் ஹய்யான் கண்டு பிடித்த அமிலங்கள்
Hydrochloric acid

Nitric AcidHNO3

Sulfuric AcidH2SO4

தங்கத்தை கரைக்கக் கூடிய  அஃஉஆ ரிஜியா அமிலத்தை   கண்டுபிடித்தவர் யார் .  அதிலிருந்து மற்றவைகள் தொடர்ந்தன.
ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800  ரில்   அபு  மூஸா  ஜாபிர்  இப்ன்  ஹய்யான்  (Geber) கண்டுபிடித்தார்

இஸ்லாமிய விஞ்சானி என்று அறியாதவாறு நாம் இருக்கின்றோம்
இஸ்லாம் கொடுத்த விஞ்ஞானம் வைத்து மற்றவைகள் உருவாகியது அநேகம் .

அபு  அல் -ரய்ஹான்  முஹம்மது  இப்ன்  அஹ்மத்  அபு  அல் -ரய்ஹான்
http://en.wikipedia.org/wiki/Ab%C5%AB_Ray%E1%B8%A5%C4%81n_al-B%C4%ABr%C5%ABn%C4%AB

நாம் இஸ்லாமியர்களின் அறிவின் ஆற்றல்களை அறியாமல் மற்றும் தெரிந்து கொள்ளாமல் உள்ளோம்.
இவைகளை நாம் மக்களுக்கு அறிய வைக்க வேண்டியது நம் கடமை

Thursday, 2 May 2013

அக்கரைமீது அக்கறை வர

அக்கரைமீது அக்கறை வர
இக்கரை விட்டு அக்கரை போக
அக்கறை இல்லை அக்கரையில்
இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைவந்தால் அக்கரை எப்பொழுது போவாய் என அக்கறையோடு கேட்க
அக்கரையிலிருந்து  அக்கறையோடு அனைத்தும் கொண்டு வந்திருப்பேன் என பெட்டி திறக்க
அக்கறையிருந்தால்தானே கொண்டு வருவீர்கள் யெனச் சொல்ல
கறைபிடித்த மனம் கொண்டோரை கண்டு கொண்டேன்

அக்கறையோடு பேசுவாள் நான் அக்கரையிலிருக்க
இக்கரை வந்தால் பேச்சும் அக்கறையாக அமையும்
இக்கரையில் வைகறை நாட்கள் பல ஓட
'அக்கரைக்கு எப்போது' யென்பாள் நக்கலாக

அக்கரை வாழ்கையில் நடந்ததை வெளியில் சொல்லமுடியாது
இக்கரையில்  வீட்டிற்குள் நடந்தவைகள் வெளியில் சொல்லமுடியாது
அக்கரை போகும்போதேல்லாம் பெற்ற  மக்களை விட்டுப் பிரிய மனம் அழுகும்
அக்கறையோடு அனைத்தையும் அடக்கிக் கொண்டு அக்கரை போக வேண்டும்