Tuesday 30 April 2013

ஏமாற்றம்!



மாதவி, என் தூரத்து உறவுக்காரப் பெண்.  என் முறைப் பெண்ணுங்கூட.  கல்லூரியில் பயின்று வந்த எனக்கு என் திருமணத்தில் எனது பெற்றோர் காட்டிவந்த அளவு அவசரம் தெரியவில்லை.  ஆனால் பெற்றோர் மன நிறைவோடு நடைபெறும் திருமணம் வாழ்வில் நல்லது பயக்கும் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்ட நான் ஒப்புதல் அளித்துவிட்டேன்.  மாதவி அழகி தான்.  கல்லூரியில் புதுமுக வகுப்புவரை படித்து நிறுத்திவிட்டவள்.  நான் பி.ஏ.வை இந்த ஆண்டோடு முடிக்க வேண்டும்.  மாதவியின் வீட்டில் எல்லோருக்கும் அவளை எனக்கு முடித்துவிட இஷ்டந்தான்.  ஆனால் அவள் என்னை நேசிக்கிறாளா? என்னை மணம் செய்து கொள்ள அவளது மனம் விரும்புகிறதா? இன்பமான வாழ்வு தேவை என்றால் இருவரும் விரும்பியேற்கும் மணத்தால் தான் இயலும் என்ற உண்மை, என்னை அவளது மனத்தை அறிந்து கொள்ள தூண்டியது.  தனித்து சந்திக்க சந்தர்ப்பம் கிட்டாதா என்று ஏங்கிக் கிடந்தேன்.
என் கையிலே ‘லாஸ்கி’ எழுதிய அரசியல் பாடப்புத்தகம் விரித்தபடியே இருந்தது.  கண்கள் புத்தகத்தை நோக்கியவாறே இருந்தன.  எண்ணம்  புத்தகத்தைவிட்டு மாதவியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
மாதவி மட்டும் என்னை மணக்க பூரண சம்மதம் தந்துவிட்டால் நான் தான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன்.  அதோ மாதவி! ஏதோ பஸ்ஸை எதிர் பார்த்து நிற்கிறாள் போலும் நான் எதிரேயிருந்த ‘பஸ் ஸ்டாண்;டை’ நோக்கி குறுக்கே ஓடினேன்.
“கிரீச்…”
“அம்மா….”


நான் கண் விழித்த போது நான் இருந்த சூழ்நிலை எனக்கு எதுவுமே புரியவில்லை.  அருகிலே அழகே உருவமான அழகு மங்கை, அவளுக்குப் பக்கத்தில் ஒரு ஆள்! அவனதுபணிவும் அடக்கமும் காணும் போது அந்தப் பெண்ணுடைய பணியாள் போல காட்சியளித்தான்.  பக்கத்தில் பல படுக்கைகள் சிலருடைய கைகள் ‘பேண்டேஜ்’ போடப்பட்டு இருந்தன.  சிலரது கால்கள் தூக்கி வைக்கப்பட்டிருந்தன.  அதில் கட்டுகள் போடப்பட்டிருந்தன.
‘ஆ’…‘ஊ’… போன்ற முணகல்கள்.  நான் ஏதுமறியாமல் என் கையைத் தூக்கினேன் என் கைகளை ஊன்றி எழுந்திருக்க முயற்சித்தேன்.  வலதுபுறம் நொடித்து விழ இருந்த நேரத்தில் “மெதுவா எழுந்திருங்க” என்றவாறு அருகில் இருந்த அழகி எனக்கு உதவியளிக்க விரைந்தாள்.  நான் என் வலது கையை நோக்கினேன் ஐயோ…புஜத்திற்கு கீழ்  என் கையைக் காணோம்! என் நினைவுகள் எங்கோ ஓடின.  நான் மாதவியைக் காண குறுக்கே பாயும் போது என்னை நோக்கி ஓடிவந்த காரின் நினைவு வந்தது!  நிலைமை விளக்கம் எனக்குக் கிடைத்துவிட்டது.  ‘ஓ’ வென மெதுவாகப் படுக்க வைத்தாள்.  அவள் கண்களிலே கலக்கம்.  என் மேல் இவ்வளவு அக்கரை வைத்துள்ள அவள் யார்?
நான் கேட்க வேண்டுமென்று நினைத்த கேள்வியை என் கண்கள் அவளைக் கேட்டது போலும்! திடீரென வீணையின் நரம்பு அதிர்ந்தது.  ஆம்; அவள் பேசினாள்.  “என்னை மன்னியுங்கள்.” என் அருகிலே இருந்து இது போல ஒரு அழகியின் குரல் பேசுவது இதுதான் முதல் முறை.  என் வாலிபம் இந்த இக்கட்டான நேரத்தில் கூட பூரித்தது.  உடலெல்லாம் ஏதோ ஒரு புத்துணர்ச்சி.  நான் அவளையே பார்த்தேன்.  என் விழி இன்னும் விளக்கம் கேட்பதைப் புரிந்து கொண்டள் போல கதையைக் கூறினாள்.
நான் கையிழந்த கதை இதுதான்.  மாதவியைக்கண்டு அவளது எண்ணமறிய குறுக்கே பாய்ந்த என்னை மஞ்சுளாவின் கார் மோதியது.  முடிவு என் கையை நானிழந்தேன்.  நான் மஞ்சுளாவுக்கு என் பெற்றோரின் முகவரி தந்து கடிதம் எழுதச் சொன்னேன்.  நான் அடிபட்டபின் என்னை யாருமே வந்து பார்க்கவில்லை என்பதை மஞ்சுளா மூலம் அறிந்தேன்.  பின் நான் பஸ் ஸ்டாண்டில் பார்த்த மாதவி ஏன் என்னைப் பார்க்க வரவில்லை.  என்னால் மாதவியை அறிந்து கொள்ளவே முழயவில்லை.
என் பெற்றோர் வந்தனர்.  விஷயம் அறிந்த அவர்கள் துடித்த துடிப்பு!… அவர்களைச் சமாதானம் செய்வதற்குள் எனக்கு போதும் போதுமென ஆகிவிட்டது’ என் தாய் மஞ்சுளாவை வசை மலரால் அர்ச்சிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அவள் அழுவதையன்றி வேறெதுவும் பேசவில்லை.  முழுக்குற்றம் என்மேல் தான் என்பதை எடுத்துக்கூறி விஷய விளக்கம் தந்தேன்.  நான் அடிபட்ட அந்நாளில் மாதவி எங்களுருக்கு வந்திருந்ததாக என் தாயார்  கூறினார்கள்.  பின் நான் பார்த்த அந்தப் பெண் யார்? மாதவியைப் போன்றிருந்த வேறொருத்தி.  நான் என் பைத்தியக்காரப் போக்கினை நினைத்து சிரித்துக் கொண்டேன்.
நாட்கள் ஓடின.  நான் ஆஸ்பத்திரியிலிருந்து ஒற்றைக் கையனாக வெளியேறினேன்.  மஞ்சுளா அடிக்கடி அவள் வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தாள்.  என் விடுதி அறையில் பொழுது போகாத நேரமெல்லாம் நான் மஞ்சுளாவை சந்திக்க ஆரம்பித்தேன்.  மஞ்சுளா ஒரு நாள் ஒரு வெடியைத் தூக்கிப் போட்டாள்.  அவள் என்னை மணக்க முடிவு செய்திருப்பதாக என்னிடம் துணிந்து கூறிவிட்டாள்.  தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் அது தான் எனச் சாதித்தாள்.  நான் மாதவியை மனநிறைவோடு ஏற்றுக் கொள்ள இருந்தேன்.  ஆனால் மாதவி என்னைப் பற்றி என்ன கருதுகிறாள் என்பதை உணர இயலாதவனாக இருந்தேன்.  இந்த நேரத்தில் மஞ்சுளா என்னை நேசிக்கிறாள் என்பதை கேட்டவுடன் என்னால் எந்தவித பதிலையும் கூறமுடியவில்லை.  அவளிடம் விரைவில் பதில் கூறுவதாக கூறி வெளியேறினேன்.
நான் சிந்தித்தேன்.  மஞ்சுளாவுக்கு என்ன முடிவு கூறுவது? அந்த நேரத்தில் என் வீட்டிலிருந்து வந்த கடிதம் என்னை ஒரு முடிவிற்கு வரச் செய்தது.  மாதவியின் பெற்றோருக்கு ஒரு கையிழந்த எனக்குப் பெண் தந்திட அவ்வளவாக விருப்பமில்லை என்பதை எழுதியிருந்தார்கள்.  என்னை விட்டு ஒரு பெரிய பாரம் இறங்கிவிட்டது.  மாதவி! நான் அவளை மனப்பூர்வமாக நேசித்தேன் அவள் மகிழ்ந்தாள்.  ஆனால் மாதவியை என்னால் மறக்கவே முடியவில்லை.
அன்று என் திருமண நாள் நண்பர்கள் குழாமோடு கேலியாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த எனக்கு என் தந்தை நேரமாகிவிட்டதென்று ஆள் அனுப்பிவிட்டார்.  நண்பர்களை மணமேடைக்கு வரச்சொல்லிவிட்டு நான் முதலில் புறப்பட்டுவிட்டேன்.
மணமேடையில் நான் அமர்ந்திருந்தேன்.  மஞ்சுளாவை அழைத்துவந்தனர்.  அருகிலே மாதவியும் வந்தாள்.  என் கண் இருவரையும் பார்த்தது.  மனக்குரங்கு மீண்டும் தாவ ஆரம்பித்தது.  ஆனால் மஞ்சுளாவின் அந்த களங்கமில்லா முகத்தைக் கண்டதும் நான் தவறு புரிவதை உணர்ந்தேன்.  விரும்பாதவளை நினைத்து என்ன பயன்?
மஞ்சுளா அருகிலே அமர்ந்தாள்.  புரோகிதர் மந்திரங்கள் ஜபித்தார்.  “கெட்டிமேளம்!! ஏன்ற புரோகிதரின் குரல்.  “மாப்பிள்ளை! தாலியைக் கட்டுங்கள்” புரோகிதர் தாலியைக் கொடுத்தார்.  நான் கையை நீட்டினேன்.  ஆனால் இடது கை நீண்டது.  வலது கையில் புஜம் மட்டும் நீண்டது.  என் நிலையை உணர்ந்தேன்.  என் கண்கள் கலங்கியது.  திரும்பி பரிதாபத்தோடு மஞ்சுளாவை நோக்கினேன்.  அவள் முகம் “ஐயோ என்னால் தானே இந்த கதி” என்று கூறியது போல் சுருங்கியிருந்தது.  அவளது கண்களில் ஒரு மருட்சி! திடீரென இரண்டு கைகள் எனக்கு உதவிக்கு வந்தன.  நான் அந்தக் கைகளின் உதவியோடு மஞ்சுளாவின் கழுத்தில் தாலியைக் கட்டினேன், எங்கிருந்தோ ஒரு சொட்டு நீர் என் கையில் விழுந்தது.  அந்த சுடுநீருக்குச் சொந்தக்காரர் யாரென அறிய நிமிர்ந்தேன்.  மாதவி! கலங்கும் கண்களோடு உள்ளே ஓடினாள்.
என்னை மீண்டும் குழப்பம் சூழ்ந்தது.  மாதவி என்னை காதலித்திருக்கிறாளா?
நான் கையிழந்த பின்னும் என்னை அவள் நேசித்திருக்கிறாள் போலும்.  ஆனால் அவளது அடக்கம் அந்த செய்தியை வெளியிடச் செய்யவில்லை.  முடிவு நான் அவளை ஏமாற்றிவிட்டேன் காதல் என்பது மன ஒற்றுமையினால் ஏற்படும் ஒன்று என்பதை உணர்ந்தேன்.  ஆனால் இனி என்ன செய்ய இருக்கிறது? என் வாழ்வுதான் பிரிதொரு திக்கை நோக்கித் திரும்பிவிட்டதே! ஆனால் என்னால் என்னிடம் அன்பு வைத்திருந்த மாதவிக்கு தர முடிந்தது.  இரண்டு சொட்டு நீர்தான்.  என் கண்ணிலிருந்து வழியும் நீரை மஞ்சுளா பார்க்கக் கூடாதே என்பதற்காக அடை துடைக்க என் கையை எடுத்தேன்.  “தடக்”- என்ற ஒலி விழித்துப் பார்த்தேன் கீழே லாஸ்கி எழுதிய புத்தகம் கிடந்தது.  குனிந்து எடுத்திட கையை நீட்டினேன் என்ன ஆச்சரியம்! எனக்கு இரண்டு கைகளும் இருந்தன.  நான் நினைவுலகிற்கு விரைந்து வந்தேன்.  நான் கண்டதெல்லாம் கணவென்பதை உணர்ந்தேன்’ சிரித்துக் கொண்டே சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்த போது தபால்காரர் தந்த கடிதத்தை வாங்கி பிரித்தேன் என் தந்தை எழுதியிருந்த கடிதம் அது! மாதவியிடம் எங்கள் திருமணம் குறித்து கூறிய போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லையாம்.  திருமணத்திற்கு நாள் குறித்துவிடலாமா எனக் கேட்டு, என் தந்தை எழுதியிருந்தால், இனி அட்டி என்ன இருக்கிறது?


எழுதியவர்
- நீடூர் அலி.
.

1 comment:

  1. சுவாரஸ்யம்... முடிவை எதிர்ப்பார்க்கவே இல்லை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete