மாதவி, என் தூரத்து உறவுக்காரப் பெண். என் முறைப் பெண்ணுங்கூட. கல்லூரியில் பயின்று வந்த எனக்கு என் திருமணத்தில் எனது பெற்றோர் காட்டிவந்த அளவு அவசரம் தெரியவில்லை. ஆனால் பெற்றோர் மன நிறைவோடு நடைபெறும் திருமணம் வாழ்வில் நல்லது பயக்கும் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்ட நான் ஒப்புதல் அளித்துவிட்டேன். மாதவி அழகி தான். கல்லூரியில் புதுமுக வகுப்புவரை படித்து நிறுத்திவிட்டவள். நான் பி.ஏ.வை இந்த ஆண்டோடு முடிக்க வேண்டும். மாதவியின் வீட்டில் எல்லோருக்கும் அவளை எனக்கு முடித்துவிட இஷ்டந்தான். ஆனால் அவள் என்னை நேசிக்கிறாளா? என்னை மணம் செய்து கொள்ள அவளது மனம் விரும்புகிறதா? இன்பமான வாழ்வு தேவை என்றால் இருவரும் விரும்பியேற்கும் மணத்தால் தான் இயலும் என்ற உண்மை, என்னை அவளது மனத்தை அறிந்து கொள்ள தூண்டியது. தனித்து சந்திக்க சந்தர்ப்பம் கிட்டாதா என்று ஏங்கிக் கிடந்தேன்.
என் கையிலே ‘லாஸ்கி’ எழுதிய அரசியல் பாடப்புத்தகம் விரித்தபடியே இருந்தது. கண்கள் புத்தகத்தை நோக்கியவாறே இருந்தன. எண்ணம் புத்தகத்தைவிட்டு மாதவியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
மாதவி மட்டும் என்னை மணக்க பூரண சம்மதம் தந்துவிட்டால் நான் தான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன். அதோ மாதவி! ஏதோ பஸ்ஸை எதிர் பார்த்து நிற்கிறாள் போலும் நான் எதிரேயிருந்த ‘பஸ் ஸ்டாண்;டை’ நோக்கி குறுக்கே ஓடினேன்.
“கிரீச்…”
“அம்மா….”