வீட்டோடு மாப்பிள்ளை ஆவதில் கவுரவம் ஒன்றும் குறைவதில்லை. அதனால் அனுகூலமே அதிகம் உண்டு . ஏனெனில் மனைவி தன் கணவனுடன் சேர்ந்து தனது தாய் வீட்டிலேயே தங்கி வாழும் போது தனது சகோதரிகள் மற்ற தனது தாய் வழி உறவினர்கள் ஆகியோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கிறது என்பது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு எந்த ஒரு தயக்கமுமின்றி தன் உறவினர்களிடம் உதவி நாட முடிகிறது.
கடல் ஓரப் பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்களிடம் (அதாவது – மரைக்காயர்களிடம்) கணவன் தனது மனைவி வீட்டாருடன் சென்று விடுவதால், மாமனார் உறவுகளின் உதவி அதிகம் கிடைக்கும். திருமணத்தின் போதே பெண்ணுக்கு வேண்டிய அளவு (வீடு முதற்கொண்டு) வசதி செய்து தந்து விடுவார்கள் .
காயல்பட்டினத்தில் புகுந்த வீட்டிற்கு சென்று வாழ்க்கை நடத்துவது ஆண்கள்தான். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த உருக்கமானதொரு நிகழ்வின் விளைவாக பின்பற்றப் படுகிறது. கர்ப்பிணிப் பெண் ஒருவரை மாமியார் கொடுமை படுத்தியதால் இனிமேல் கணவன் மனைவியின் வீட்டுக்குச் சென்று வாழ வேண்டும் என முடிவுக்கு வரப்பட்டதாம். மின்சாரம் போன்ற அடிப்படை வசதி இல்லாத அந்த காலத்தில், ஊற்றுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேன்டிய நிலை. தனது மகள் இருக்கும் பொழுது தனது மருமகள் நிறைமாத கர்ப்பிணியை நடுப்பகலில் உச்சி வெயிலில் ஊற்றுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வர மாமியார் ஏவ, அதன்படி மருமகள் தண்ணீர் கொண்டு வரும் பொழுது மயங்கி விழும் நிலை ஆனது. இதனைக் கண்ட ஒரு பெரியார் (தாளி அலாவு தீன் ஆலிம் அவர்கள்) தனது தாயாக இருந்தால் இம்மாதிரி தனது மகளை அவதிக்கு ஆளாக்க மனம் வராது. ஆகையால் இனி கணவன் மனைவி வீட்டுடன் வாழ்வது நல்லது என்று சொன்னார்கள் .அது முதற் கொண்டு மாப்பிள்ளை, மாமியார் வீட்டில் வாழும் பழக்கம் வந்ததாகத் தெரிகிறது.
இந்த நடைமுறையில் நன்மையும் உண்டு. அனுகூலமும் உண்டு.
No comments:
Post a Comment